பேட்டி – முகநூல்

#எழுத்தாளர்அறிமுகப்படலம் இது நம்ம ஏரியா

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய எழுத்தாளர் அறிமுகப் படலத்தில் பங்கேற்கப் போவது நமது தோழமையும் முன்னாள் எழுத்தாளருமான ஜோவிதா.

 

ஆனந்த ஜோதி தோழிக்கு அன்பு கலந்த வணக்கங்கள்…தங்களின் முயற்சிக்கு முதலில் ஒரு பெரிய பாராட்டு…பெரிய சாதனையாளர்கள் உள்ள ஒரு உலகத்தில் சிறு எறும்பாக இருக்கும் என்னிடம் வந்து தாங்கள் கேள்விகளை தொடுத்ததும்…முதலில் ஆச்சர்யம் என்னத்தை சாதிச்சோம் என்று…ஆனாலும் பத்து வருடங்கள் கழித்து திரும்பி பாரக்கையில் எழுத்துலகம் ஜெட் வேகத்தில் போய் கொண்டிருக்கிறது என புரிந்தது.

எஸ்.ஜோவிதா என்ற ஒரு எழுத்தாளர் (சொல்லிகொள்ளலாமோ தெரியவில்லை) காணாமல் போனது ஏன்  என்றே பல வாசகர்களுக்கும் எழுத்துலக நட்புக்களுக்கும் தெரியவில்லை. நானாக சொன்னால் தான் உண்டு. பலர் என்னிடம் கேட்டே இருக்கிறார்கள்.

ஒரு காரணமும் இல்லை. படிக்கும் காலத்தில் சும்மா எழுதி போட்டது. நான் ஆச்சர்யப்பட்டவர்கள் என்னை பார்த்து ஆச்சர்யப்படும் வரை ஓயாது பயணித்த என்  லட்சிய பாதையில்   என் கனவுகளுக்கு உயிர் கொடுக்க எடுத்து கொண்ட கால அவகாசம் தான்.  நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எனது பாணியில் எனது கருத்துக்கள் மட்டுமே…தொழில் நுட்ப சொந்த  நிறுவனங்களின்  நிர்வாகி என்ற கண்ணோட்டத்தில் பல பதில்கள் எனது தொழில் பாணியிலேயே தருகிறேன்.

 

1. உங்களுடைய பெயர்:

எஸ்.ஜோவிதா (செல்வராஜா அப்பாவின் பெயர் அதன் பின் அதே எஸ் தொடர்ந்திடுத்து சிவா கணவரின் பெயர்)

2. என்ன படிச்சிருக்கிங்க :

Multimedia Graphic Design Degrees & Soft&Hardware, Networking Degrees in Paris (மெடல்களும் சர்டிபிகேட்டும் எண்ணவில்லை)

3. உங்களுடைய சொந்த ஊரின் பெயர்:

பிறந்தது இலங்கை – வளர்ந்ததும் படித்ததும் வாழ்வதும் பாரிஸ்

4. உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்வதாக இருந்தால்:

என்னை பற்றியா? அது தற்பெருமையில் சேர்ந்திடாதா? என்னை பற்றி அறிய ஆவலோடு உரையாட வரும் உறவுகளுக்காக சில சொல்கிறேன்…

தன்னம்பிக்கை நிறைந்தவள்…தனித்து போராடியே ஜெயித்தவள்.. தன்னையும் உயர்த்தி தன்  கூட சேர்ந்தவர்களையும் உயர்த்தி விடுவாள்….எந்த கெட்ட குணங்களையும் நெருங்க விடாதவள். பார்க்கும் கோணம் பாசிட்டிவ்…. செல்லும் பாதை கரடு முரடாக இருந்தால் கூட கவலையின்றி அதை வைத்தே கோட்டை கட்டும்  திறன் …ரசிப்பு திறன் கொண்டவள்.. எதையும் அலசி ஆராய்ந்து அனலைஸ் செய்யும் மைண்ட் உள்ளவள் ….. திமிரோ தலைக்கனமோ இல்லாதவள்…எல்லோரும் சமம் என்ற கொள்கை உள்ளவள் எதிரிகள் இல்லாதவள்  (எதிரியாக இருக்கவா ? என எதிராளியை  யோசிக்க வைப்பவள்)  வெற்றிகளை விட தோல்விகளை விரும்புபவள். வெற்றி அன்றே மறந்து போகும் ….தோல்விகள் உரம் போட்டு, உரம் போட்டு நம்மை செம்மைப்படுத்தும்  அதையே என்கூட சேர்ந்தவர்களுக்கும் சொல்லும் மந்திரம். போதும் என்று நினைக்குறேன் இறுதியாக
சொல்லிக்கொள்கிறேன்  முடியாது  – தெரியாது – இயலாது – இவை மூன்றும் எஸ்.ஜோவின் அகராதியில் கிடையாது . அவள் கூட சேர்ந்தவர்களும் சோர்ந்தது இல்லை.

5. உங்களது குறிக்கோள் என்ன, எழுத்துலகில் நீங்கள் படைத்த சாதனை:

எனது குறிக்கோள்களுக்கும் எழுத்துலகத்துக்கும் சம்பந்தம் இல்லை – எழுத்துலகில் நான் சாதனை படைக்கவில்லை. ஆனால் இப்பொழுது தோன்றுகிறது..தோன்ற வைத்த எழுத்துலகத்துக்கு நன்றிகள்

6. உங்களது எழுத்து அனுபவம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா. ?

கண்டிப்பாக… யூனிவர்சிட்டி போக முதல் உங்கள் நாட்டு மொழியில் நீங்கள் பார்த்த மூவியினை பற்றி விவரித்து அதை ஸ்டோரி  போர்ட் ஆக காட்சி படுத்தல் வேண்டும் என்ற போது நான் அதற்காக உட்கார்ந்து  பார்த்த படம் 2000 இல் வந்த வானத்தை போல
அதை அப்படியே கதையாக பிரெஞ்சு மொழியில் எழுதி ப்ராஜெக்ட் செய்த பொழுது கிடைத்த வரவேற்பு..
எழுதிய பரீட்ச்சைக்கு ரிசல்ட் வர ரெண்டு மாதங்கள் என்ற போது (இங்கு ஆடி ஆவணி மாதங்கள் விடுமுறை..புரட்டாதியில் ஆரம்பிக்கும் அத்தனை கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் )…டென்ஷன் வரும் அல்லவா ? பிடிச்ச இயற்கை காட்சிகளை அந்த இடத்துக்கே போயி வரைவதுண்டு…இல்லை என்றால் அருங்காட்சியகம் மோனலிசா ஓவியம் இருக்கும் அந்த அருங்காட்சியகம் அற்புதம் …(வெள்ளக்கார) தோழிகளுடன் சென்ற போது அவர்கள் ஓவியங்கள் வரைய நானோ  எடுத்த உடனேயே நாவல் எழுத தொடங்கினேன் ..அழகிய அசுரா (நீ எந்தன் சுவாசமாய் என்ற பெயரில் வெளியானது) சரியாக தமிழ் இலக்கியம் இலக்கணம் படித்தது இல்லை.

7. மொத்தம் எத்தனை நாவல்கள் எழுதியிருக்கிங்க :

2000 இருந்து 2005 வரை 18 / அப்புறம் மார்ச் 2020  வீட்டு சிறையில் பூத்தது 2 நாவல். முதல் நாவல் வெளியானது 2009. 5 நாவல்கள் 2010 வரை வெளியானது …அதன் பின் 2020 ஒரு நாவல் வெளியானது …மிகுதி தேடி எடுத்து அனுப்ப நேரமின்மை

8. எழுத்துலகிற்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது. .

காணாமல் போயி 10 வருடங்களுக்கு மேல் ஆகுறது

9. தற்சமயம் எழுதி வரும் நாவல் அல்லது தொடர்கதை எந்த நாளிதழுக்காக எழுதப் போறீங்கனு சொல்ல முடியுமா:

எதுவும் இல்லை…எந்த நாளிதழுக்கும் எழுதியதும் இல்லை

10. எழுதுவது என்பது முழுநேர வேலையா அல்லது வேறு ஏதாவது வொர்க் பண்ணுறீங்களா :

எழுதுவது முழு நேர வேலையும் இல்லை.. பகுதி நேர வேலையும் இல்லை. Relaxation writer அப்படி என்று சொல்லலாம் …மனதின் இறுக்கம் தணிக்கும் ஒரு மருந்து இந்த எழுத்து. அது நாவல்தான் எழுத வேண்டும் என்று இல்லை கவிதை ஜோக்ஸ் …சிந்தனைகள் எதுவாக இருக்கட்டும். பேனா எடுத்து கிறுக்கினால் கிறுக்கு பிடித்து இருக்கும் மூளை ஒழுங்குக்கு வரும்… வேலை செய்கிறேன் தொழிநுட்ப நிறுவனங்களின் நிர்வாகி

11. நீங்கள் எந்தெந்த நாளிதழ், வாரப்பத்திரிகையில் தொடர்கதை , நாவல்கள் எழுதியிருக்கிறீங்க:

எதுவிலும் இல்லை…அந்தளவுக்கு வளரவும் இல்லை…

12. நாளிதழில் நாவல் எழுதுவது என்பது அத்தனை சுலபமான விசயம் இல்லையே எப்படி கிடைத்தது என்று சொல்ல முடியுமா அல்லது சொல்லக் கூடாதா ரகசியம் ஏதாவது இருக்கிறதா :

நாளிதழில் எழுதுவது என்பது சாத்தியம் இல்லை …யோசித்து பார்த்தால் எனக்கு புலப்படுவது தரமான எழுத்துக்களாக இருந்தால் வாய்ப்புகள் அதிகம்

13. உங்களது முதல் கதை புத்தகமாக விற்பனைக்கு வந்த போது உங்களது உணர்வு, வீட்டார் என்ன மாதிரி உணர்ந்தீர்கள் :

என்னோட நாவல்கள் அனைத்தும் நானே இங்கு (2000-2004) புத்தகமாக போட்டு நண்பர்களுக்கு கொடுத்தேன். அதன் பின் ஆன்லைனில் அதுவும் என்னோட சிஸ்டரின் தளத்தில் தான் அவங்க தான் எல்லாம் பார்த்துட்டாங்க …நான் எழுதிவிட்டு என்னோட படிப்பை பார்க்க போயிடுவேன்…அவங்க தான் ஆரம்ப காலத்தில் blog மூலம் உலகத்தின் மூலை முடுக்கில் உள்ள வாசகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். அதன் பின் அத்தனையையும் விற்பனை  புத்தகமாக்குங்க என வாசகர்கள் அன்பு கட்டளை இட …சிஸ்டரின் பிரண்டு எனக்கு பிரண்டானாங்க. அமெரிக்காவில் இருக்கும் என் மதிப்பிற்குரிய, எனது நலம் விரும்பியும், எனது குடும்பத்தில் ஒருவராகி போன திருமதி வீணா குமார் அவர்களும், அவர்களது சிஸ்டர் கீதா ரவிச்சந்திரன் (இந்தியா)  . அவர்கள் இல்லை என்றால் என் நாவல்கள் வெறும் எழுத்தோடு ஒரு நாலு சுவத்துக்குள் அடங்கி போய் இருக்கும். என்றும் அவர்களுக்கு என் மனமார்ந்த, ஆத்மார்த்தமான நன்றிகள் பல சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

14. உங்களது படைப்பு காதல் கலந்த குடும்ப படைப்பாக இருக்குமா அல்லது சமூக அக்கறை நிறைந்த படைப்பாக இருக்குமா:

காதல் கலந்த குடும்ப நாவல்களே தான்

15. குடும்ப நாவல் என்றால் எப்படி இருக்கணும் என்று நினைக்கிறீங்க:

எந்த வயதினரும் முகம் சுளிக்காமல் எந்த காலத்திலும் படிக்குமாறு இருக்க வேண்டும் …

16. காதல் படைப்பிற்கும் குடும்ப நாவலிற்கும் உள்ள வித்தியாசம், உங்களுக்கு பிடித்தமான தேர்வு:

காதலே மட்டும் எழுதினால் ஒரு சில வயதினரை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு  எழுதுவது போலாகாதா? குடும்பத்தில் காதல் இருக்கும் அல்லவா? காதலும் வேண்டும் குடும்பமும் வேண்டும். கலந்து எழுதலாம் அல்லவா? மண் குழைத்து சட்டியும் செய்யலாம் பானையும் செய்யலாம் ஆனால் அன்றாட வாழ்க்கைக்கு இரண்டும் தேவை அல்லவா ? கருக்களை அமைப்பதும் கதைகளை கொண்டு போகும் விதமும் இப்படித்தான் எழுதுவோம் என்பதும் ஒவ்வொருத்தரையும் பொறுத்து வேறுபடும். எனது தேர்வு காதல் கலந்த குடும்ப நாவல்கள் தான்…முகம் சுளிக்காமல் இன்னொருத்தருக்கு வயது வித்தியாசம் இன்றி பரிந்துரை செய்வதாக இருக்க வேண்டும்

17. நீங்கள் எழுதிய நாவல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாவல் எது ஏன் ? பிடித்தமான கதாபாத்திரம் எது என்று ஏதாவது சொல்ல முடியுமா :

நான் எழுதிய நாவல்கள் அனைத்தும் எனக்கு பிடித்தமானது தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கரு…. கோணம் …ஒவ்வொரு கதாபாத்திரமும் சிரத்தையுடன் சிந்தித்து படைக்கப்பட்டவை …என்னோட அத்தனை நாவல்களது  கதாபாத்திரத்திலும் வரும் நாயகர்கள் குணங்கள் அவர்களது நடை உடை பேச்சு எல்லாம் என்னோட கனவுகாதலன் என்று சொல்லலாம்  (கற்பனைக்காதலன் உயிர் பெற்று கரம் பற்றிய போது விழி விரியாத விடியல் இல்லை)

ஆன்லைனில் படித்த வாசகர்களிடம் வரவேற்பு பெற்ற நாயகர்கள் எனக்கும் பிடிக்கும் எங்கே என் மனம் சந்தோஷ் / நிலாவே வா – அக்சய் / யாரின் மனம் யாருக்கென்று – மிதுன் / என்னில் நீயடி – அஸ்வந்த் / எந்தன் விழியோடு உறவாடும் காதலே – ரோஹன்

ஏன் பிடித்தது என்றால் ……பெற்ற தாயை பூஜிக்கும் நாயகர்கள் அந்த தாயின் வளர்ப்பில் சோடை போனவர்கள் இல்லை …பெண்களை பெண்மையை மதிக்க சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டவர்கள் நாயகர்கள் ….ஆண்களுக்கே உரிய குணங்கள் இருந்தாலும் …இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள் இருந்தால்  பெண்களுக்கு மட்டுமல்ல ஒரு ஆணுக்கு கூட பொறாமை வர தூண்டும் பாத்திர படைப்புகள்.  நாயகிகள் கூட…மூக்கை சிந்தாத முடங்கி இருக்காத நாயகிகள்

18. காதல் உணர்வுகளையும் தாம்பத்ய காட்சியினையும் ஒரு எழுத்தாளர் எப்படி கையாள வேண்டும் என்று நினைக்கிறிங்க :

பெட் ரூம் வரை கேமரா போகணுமா? தோலுரித்து காட்ட வேண்டாமே என்று தான் தோணுது…படிக்கும் வாசகர்கள் எந்த வயதினர் என்று எவரும் அறியார்…இங்கு பாரினில் சினிமா மட்டுமல்ல லைப்ரரியில் நாவல்கள் கூட வயது வந்தவர்கள் வராதவர்கள் என்ற பிரிவு உண்டு…அதை நம்ம சினிமாவிலும் காண கிடைக்காது …நாவல்களிலுமா ? நாவல்களில் வயது வரம்பு இல்லாது போனால் எப்படி? வீட்டுல உள்ள பெரியவங்க நிலை என்னவாகும் தமது பிள்ளைகள் எதை படிக்கிறார்கள் என தெரிய வரும் போது ?

சபாஷ் சரியான பதில்கள் நானும் கூட பல சமயம் அப்படி நினைப்பதுண்டு. தரமான எழுத்துக்கள் அவர்களது படைப்புகளை மட்டும் அல்ல அவர்களது பெயரையும் காலத்திற்கும் பேச வைக்கும் என்று …

19. இன்றைய புது எழுத்தாளர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :

சொல்லுற அளவுக்கு நான் வளரவில்லை..ஆனால் தோழமையுடன் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்…எல்லோரும் எழுதுகிறார்கள் நாமும் எழுதுவோம் என்று எழுத முன் வராது…எதை எழுதினாலும் எல்லோராலும் பேசப்படும் எந்த காலத்துக்கும் போற்றப்படும் எழுத்துக்களை எழுத பாருங்கள்…எழுத்துலகம் போட்டி நிறைந்தது போட்டிக்காக எழுதுறோமா…? பொறிக்கப்பட வேண்டும் என எழுதுறோமா? நிலைத்து கொடி நாட்ட வேண்டும் என எழுதுறோமா ? முடிவு நீங்கள் தான் செய்ய வேண்டும் …எழுத்து ஆணி அழகானது, அற்புதமானது,. எண்ணங்களை, உணர்வுகளை படைத்து தள்ளும்  .படைப்பது எதுவென்றாலும்…பக்குவப்பட்ட படைப்பாக இருக்கட்டும்…நிறைய..படியுங்கள் … நிறைய கேளுங்கள் ..ஆலோசனைகளை… ஏற்றுக்கொள்ளுங்கள். விமர்சன அம்புகளை…வாங்கி நெஞ்சில் குத்தாமல்….அந்த அம்பு எதற்க்காக அனுப்பப்பட்டது என ஆராயுங்கள்…திருத்துங்கள்..செம்மைப்படுத்துங்கள்…விமர்சன  அம்புகளை வாங்கி … அதை வைத்தே முன்னேறுங்கள்…நாவடக்கம்…சொல்லடக்கம்…பொறுமை வேண்டும்…இது எழுத்துலகத்துக்கு  அல்ல எந்த துறைக்கும் பொருந்தும் அட்வைஸ் அல்ல… கற்றுக்கொண்டது.

20. அன்றைய எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கும் இன்றைய எழுத்துக்களுக்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :

நான் படித்த நாவல்கள் குறைவு…இங்கு அதற்க்கு சந்தர்ப்பம் இல்லை. ஆர் மணிமாலா  மேடம் வித்யா சுப்ரமணியம் மேடம்  அனுராதா ரமணன் மேடம் ..இவர்களது படைப்புகள் ஒரு தோழி மூலம் கிடைக்க பெற்று வாசிக்க தொடங்கினேன்…ஆரம்ப காலத்தில் பெண்மணி கண்மணியில் வரும் கதைகள் அருமையாக இருக்கும் என்று அந்த தோழி பரிந்துரை செய்தார் அப்பொழுது சந்தா கட்டி நேரிடையாக கிடைக்க பெற்று வாசித்தேன்… அதன் பின் திரு பாலகுமாரன் அவர்களது எழுத்துக்கள் அனைத்தும் என்  நலன் விரும்பி ஒருவரின் மூலம் படிக்க வாய்ப்பு கிடைத்தது அன்றைய எழுத்தாளர்கள் நாவல்கள் கையில் எடுத்தால் வைக்க மனம் வராது…இன்றைய எழுத்தாளர்கள் எழுத்தை ஜட்ஜ் பண்ற அளவுக்கு நான் வளரவில்லை அதே நேரம் படிக்க சந்தர்ப்பமும் இல்லை.

21. ஒரு கதை தேர்ந்தெடுக்கும் போது எழுத்தாளரின் மனநிலை எப்படி இருக்க வேண்டும். அதே கதை புத்தகமாக வந்து வாசகர்களின் பார்வையில் விழுந்து படித்து முடித்த பிறகு என்ன மாதிரி உணர்வுகள் தோன்ற வேண்டும் என்று நினைக்கிறீங்க:

கதை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு குழந்தை வயிற்றில் உருவாகி அது பிரசவமாகி கைகளில் தவழும் போது எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வு. கருவில் இருப்பது என்னவாக பிறக்கும் ? எப்படி உருமாறும் ? என்ன பெயர் வாங்கும் ? என்ற எண்ணம் எல்லோருக்கும் வரும் அல்லவா, அதே போல …கதை .கரு  தோன்றியதும் அதை திறம்பட எழுத்தில் வடித்து.. செதுக்கி.. உருவமைத்து.. புத்தகமாக வெளியிட்டு வாசகர்கள் நடுவில் நாம் நிற்பது என்பது வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு விதமான உணர்வு…அதே வாசர்கள் விழுந்து விழுந்து படித்து முடித்த பிறகு இன்னொருத்தருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்…செய்ய வைக்க வேண்டும் அங்கே இருக்கு அந்த எழுத்தாளரின் வெற்றி…அந்த எழுத்துக்கு கிடைத்த சன்மானம் அது தான்…

வாவ் அருமை அப்படியே எண்ணத்திலும் என் போலவா இருப்பிங்க…

22. புத்தகமாக வெளியிடுவதற்கும், தொடர்கதைகளாக வெளிவருவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இரண்டில் எது இலகு என்று நினைக்கிறீங்க:

என்னை கேட்டால் என் கருத்து மட்டுமே சொல்கிறேன்…தொடர்கதைகளில் உடனுக்குடன் விமர்சனம் …சில நேரங்களில் எழுத்தாளரின் எண்ண ஓட்டம் தடைபடலாம்…. சில நேரங்களில் பாதியில் நின்று போகலாம்…எழுத்தாளர் சிந்தித்து வடிவமைக்க வைத்திருந்த கரு கதை காலம் முடிவில் வேறு மாதிரி அமைந்து போகலாம் ….

தொடர்கதைகள் எழுதுபவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள் என தெரியவில்லை…கொஞ்சம் எழுதிவிட்டு வாசகர்களிடம் படிக்க விட்டு பின் அவர்களது மூவ்மெண்ட் பார்த்து அடுத்த எபி என எழுதுகிறார்களா? இல்லை முழுதும் எழுதி முடித்துவிட்டு…கொஞ்சம் கொஞ்சமாக எபி தருகிறார்களா, எனக்கு தெரியவில்லை…

எனக்கு ஒரு நாவல் எழுத ஒரு மாசம் போதும் …என்னோட நாவல்கள் எல்லாம் அப்படியே ஆன்லைனில் கொஞ்சம் கொஞ்சமாக எபி போட்டுகொண்டு இருந்தார் எனது சகோதரி…நமது கருவும் திரைக்கதை அமைப்பும் ஆரம்பம் முதல் இறுதி வரை மைண்டுக்குள் அத்தனை உரை நடையுடன் ஏற்கனேவே முடிந்து இருக்கும்.  அதன் பின் நேரம் எப்பொழுது எல்லாம் அமையுதோ அப்பொழுது எல்லாம் கணணினியில் பதிவேற்றம். எந்த  சூழ்நிலையிலும் பிசாகாது எழுத்து போயிகிட்டே இருக்கும். வீடு இப்படி தான் கட்டவேண்டும்  என பிளானிங் போட்டுவிட்டு இடையிடையே குளறுபடியாவது இல்லை.ஆகவும் கூடாது.  முடித்துவிட்டு வாச்கர்களிடம் விடலாம் படித்துக்கொள்ள அப்பொழுது திருத்தி கொள்ளலாம்..

23. ஒரு தரமான நாவல் என்றால் என்ன? அதாவது எழுத்தின் தரம்:

எனது தொழில் பாணியிலேயே விளக்கம் தருகிறேன்…தரமான நாவல் என்று தீர்மானிப்பது யார் ? வாசகர்களா? சக எழுத்தாளர்களா? இல்லை பதிப்பகமா? இல்லை சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களா? எழுதுபவர்கள் அனைவரையும் கேட்டால் சொல்வார்கள் அவரவர் எழுதுவது தரம்  என்றே…இது எப்படி இருக்கு தெரியுமா ஒரு தாய் தான் பெற்ற அத்தனை குழந்தைகளும் ஓவியங்களை தான் என்பார் …தரம் என்பது ‘quality’ …இது ஒரு பொருளுக்கு இல்லை என்றால் அது விலை போனாலும் மார்கெட்டு இழந்து போய் விடும் …ஒரு கம்பியூட்டர் தயாரிக்கும் போது வெளிப்பார்வைக்கு ஆப்பிள் டிசைனும் உள்ளே மோசமான உதிரிபாகங்களை வைத்து தாயரித்து பல ரூபாய்க்கு விற்று விட்டால் அன்றே அந்த ‘Company’  இழந்தது ஒரு வாடிக்கையாளரை அல்ல நல் மதிப்பை . அவர்கள் அதன் பின் தங்கத்தால் கம்பியூட்டர் வடித்தாலும் ‘no quality’ ரேஞ்சு தான். எழுத்தின் தரம் படிக்கும் வாசகன் மட்டுமல்ல எழுதிய நாமே திரும்பி படிக்கும் போது புருவம் உயரணும் உதட்டில் மெல்லிய புன்னகை வரணும்

24. உங்களது படைப்புகளில் காதல் காட்சிகளை உணர்வு பூர்வமாக கையாள்வீர்களா அல்லது நகர்விற்கு ஏற்ப கையாள்வீர்களா :

கதையில் தேவை இல்லாதது புகுத்த கூடாது என்ற கொள்கை உள்ளவள் கதையின் ஓட்டத்துக்கும் கருவுக்கும் சம்பந்தம் இருக்கும் பட்சத்தில் அது உருவெடுக்கும்…  மாறுபடலாம் மிகைப்படுத்தல் இல்லாது. உப்போ காரமோ கூடி போனால் உணவு வாயில் வைக்க முடியாது அல்லவா ?

25. கவிதை என்பது ஒரு எழுத்தாளரின் மனதில் தோன்றும் கிறுக்கலா அல்லது உணர்வுகளின் வெளிப்பாடா:

நல்ல கேள்வி என்னை பொறுத்தவரை உணர்வுகளின் வெளிப்பாடு.. ரசனைகள் சிதறல்கள்… சில நேரங்களில் (சமுதாய) கண்ணோட்டத்தின் மனக்கொந்தளிப்பின் துளிகள்… சில நேரம் சும்மா உளறல்கள்..

26. உங்களது நட்பில் உள்ள எழுத்தாளர்கள்:

நிறைய பேர்கள் உங்களையும் சேர்த்து

27. நீங்கள் விரும்பி படிக்கும் நாவல்கள், அதன் ஆசிரியர் பெயரை சொல்ல முடியுமா:

விரும்பி படிப்பது எல்லாம் கிரைம் நாவல்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தமிழில் திரு ராஜேஷ்குமார் – திரு பாலகுமாரன் – திருமதி ஆர்.மணிமாலா – திருமதி அனுராதா ரமணன் – திருமதி வித்யா சுப்ரமணியம் இவர்களது விரும்பி படித்து  இருக்கிறேன் ..அப்புறம் குடும்ப நாவல்கள் எதுவென்றாலும் வித்தியாசமான எழுத்து ´நடை கரு கொண்ட நாவல்கள் யார் எழுதியது என்றாலும்

28.நாவல்களில் புகுத்தப்படும் திரைப்பட பாடல் வரிகள் சரியான தொகுப்பாக இருக்குமா? அல்லது அதற்கு ஏற்ப நாம் எழுதும் கவிதை வரிகள் ஏற்புடையதாக இருக்குமா:

நம்ம குழந்தைக்கு நாம் தான் பெயர் சூட்டி தாலாட்டு  பாடணும் …உயிரோட்டமும் இருக்கும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் …தனித்துவமான  பாணியும் இருக்கும் …வாசகர்கள் படிக்கும் போது கற்பனை உலகுக்கு அவரவர் ரசனைக்கு ஏற்ப உலகம் அமைக்க விட வேண்டும்… ஒரு சினிமா வாடையோ அதன் நாயகன் முகமோ வர விடுவது எனக்கு உடன்பாடு இல்லை ஒவ்வொரு வாசகரும் அவரவர் கற்பனை உலகத்தில் வடிவமைத்து வரைந்து கொள்ளும் சுதந்திரத்துக்கு  விட்டு  விட வேண்டும் . இது என்னோட கண்ணோட்டம் …

29. எழுத்தாளர்களின் மீதான வாசகர்களின் நம்பிக்கை பற்றி:

வாசகர்களுக்கு எழுத்தாளர் மீது உள்ள நம்பிக்கையை எந்த காலத்துக்கும் சிதைக்க கூடாது …எழுத்தாளரை மட்டுமல்லாது அவரது எழுத்துக்களையும் எந்த காலத்துக்கும் பேச வைக்கணும் அந்த பொறுப்பு எழுத்தாளரது…அதே நேரம் வாசகர்கள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் மாறும் அதற்க்கு ஏற்ப தரம் தாளாது கால ஓட்டத்துக்கு ஏற்ப தந்துகிட்டு இருக்கணும்

30. நாவலில் அழுத்தம் அதிகமாக இருந்தால் ரசிப்பு திறன் இருக்குமா? நகைச்சுவை கலந்த படைப்பு சுவராஸ்யமான நகர்வாக இருக்குமா?

நாவலில் அழுத்தமும் வேண்டும் சுவாரஸ்யமும் வேண்டும் ‘படித்துவிட்டு மனசு கனத்து போச்சி திரும்ப அதை தொடவே மாட்டேன்’ என வாசகர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் அன்றாட வாழ்க்கையில் காயம் பட்டவர்கள் தான் அதிகம். அவர்கள் மனதை ரிலாக்ஸ் செய்ய தூக்குவது ஒன்று நாவல் இன்னொன்று இசை. நாம் மேலும் எதற்கு அவர்களை சோகத்துக்குள் மன அழுத்தத்துக்குள் புதைக்கணும் என தோன்றும் ..மனசு சோர்வாக இருக்கும் போதோ இல்லை இவங்க நாவலை படித்தால் ரிலாக்ஸ் ஆகும் என்று எண்ண வைக்கும் நகர்வுடன் இருந்தால் நல்லது.

31. நாம் எழுதும் கதைகளின் வரிகள் சினிமா காட்சிகளை ஒத்திருந்தால் அதை தவறென்று சொல்வீர்களா :

மன்னிக்கவும் நான் சினிமா பார்ப்பது குறைவு ..யோசித்து யோசித்து விரல் விட்டு எண்ணும் அளவு தான் பார்த்த படங்கள்…தவறு  என்று சொல்லாமல் அதன் தாக்கம் சில வேளைகளில் இருக்கலாம் ..ஆனால் காப்பி அடிக்காமல் தனித்துவமாக அவரவர் பாணியில் அவரவர் எழுத்து நடையில் எழுதலாம் …சினிமா காட்சிகளை ஒத்து இருந்தால் வாசகர்கள் பக்கங்களை தட்டலாம் எந்த சினிமா காப்பிடா என்று சலிப்படையலாம்…சம்பந்தப்பட்ட எழுத்தாளர்
வேறு புதுசாக எழுதினாலும் இன்ட்ரஸ்ட் எடுத்து படிக்காமல் போகலாம்…சுத்தி… சுத்தி பார்த்தால் இந்த உலகத்தில் கோடி கணக்கில் கரு தேங்கி இருக்குறது கண்டு பிடித்து வடிவமைத்து வரைந்தே விடலாம்  ஒரு அழகான ஓவியத்தை அது வளரும் சமுதாயத்துக்கும் உதவுமாறு.

32. புத்தகத்தை கையில் எடுக்கும் போதும், முடித்து வைக்கும் போதும் என்ன மாதிரி உணர்வு தோன்ற வேண்டும் என்று நினைக்கிறீங்க:

புத்தகம் கையில் எடுத்தால் வைக்க மனது வர கூடாது …படித்து முடித்தபின் நம்மையும் அறியாமல் கண்கள் பூக்கணும் …உதட்டில் புன்னகை மலரணும் …சட்டென்று அந்த எழுத்தாளருக்கு ஒரு மெசேஜ்  அனுப்ப தோணனும்..அடுத்தவர்களுக்கு ‘படிப்பா’ என சொல்ல வைக்கணும் …இந்த உணர்வுகள் கொடுக்கும் படைப்பாளிகள் வரம் பெற்றவர்கள்… வாழட்டும் அவர்கள் எழுத்து என தோன்றும்..

ரொம்ப அருமையாக சொல்லிட்டிங்க உங்களது பல பதில் தான் எனதும்

33. புதுசாக எழுத்தாளர்கள் அறிமுகமாகி வந்து கொண்டிருக்கின்றனர். அவர் களுக்கு எதாவது சொல்ல நினைக்கிறீர்களா :

நிறைய பேர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். நான் கவனித்ததில் எழுத்தாளர்கள் அபூர்வம் வாசகர்கள் கோடி அது ஒரு காலம்.  ஆனால் தற்காலத்தில் எழுத்தாளர்கள் அதிகம் வாசகர்கள் அபூர்வமோ என எண்ணத்தோன்றுகிறது ..ஒவ்வொரு புது எழுத்தாளர்களும் வரவேற்கப்பட வேண்டியவர்கள் ..ஊக்குவிப்போம் உங்கள் பாணியில் உங்கள் குழைந்தையை பலர் போற்றும்படி உருவாக்குங்கள் …போட்டி, பொறாமை, பதட்டம், பயம் இன்றி ஏமாற்றம் வந்தாலும் தொடர்ந்து, தொடர்ந்து முயற்சியுங்கள். தோல்விகள் தான் வருதே என்ன செய்ய, என முடங்கி விடாது தொடர் தோல்விக்கு காரணம் கண்டிப்பா உங்களிடம் தான் உண்டு. அதை நீங்கள் கண்டு அறிந்து, களைந்து,  எறிந்தால் வெற்றி அதற்குள் இலை மறை காயாக தெரிய தொடங்கும் …அடுத்தடுத்து நாவல்கள் தரவேண்டும் என எண்ணாதீர்கள். கொஞ்சம் இடை வெளி விடுதல் நல்லது. சிந்தனையும் புதுப்பிக்கப்படும்… ஸ்ட்ரெஸ் இல்லாது நல்ல மன நிலையும் கிடைக்கும் புது புது வார்த்தைகளும் தோன்றும்…ஒரு நாவல் எழுதினாலும் ஓயாமல் பேச வைக்க வேண்டும்
எல்லா வித விமர்சனத்துக்கும் தலை வணங்குங்கள்…நாவல் எழுதி, எழுதி பெரிய எழுத்தாளர் ஆனாலும்..நீங்களும் ஒரு வாசகராகவே உங்களை பாவியுங்கள் …அந்த பொசிஷனிலேயே இருங்கள்… சிந்தியுங்கள்  ..இப்படி சொல்லி தர யாரும் முன் வந்தால் அவர்களை பார்த்து கரம் கூப்புங்கள் …தொழிலும் சரி எழுத்திலும் சரி…எனக்கு ஆசான்கள் வாய்த்தது இல்லை போதும் என நினைக்குறேன்.

34. உங்களுடைய புத்தகம் அமேசானில் விற்பனையாகிறதா :

தற்சமயம் ‘எங்கே என் மனம்’ புத்தகம் மட்டும் உள்ளது வாசகர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொன்றாக போட வேண்டும்

35. இந்த எழுத்தாளரின் புத்தகத்தை எடுத்தால் மனதிற்கு இதமாக இருக்கும் என்று நினைத்து வாசித்த புத்தகம் ஏதாவது உண்டா ?:

என்னோட வாசிப்பு எல்லை அற்றது. எல்லாவிதமானதையும் வாசிக்கும் பழக்கம் உள்ளவள் …வரையறை வைத்தது இல்லை.. அது சிந்தனை ஓட்டத்துக்கு விலாசமான மூளை விரிவடைதலுக்கும் தடையாக இருக்கும் என ஒரு எண்ணம் …எல்லாவிதமானதும் வாசிக்க வேண்டும்… ஒவ்வொன்றிலிருந்தும் ஒன்றை கற்று கொள்ளலாம்…நான் கற்று கொள்ளவே விரும்புவேன்… இவரது தான் படிக்க வேண்டும் அது இதமாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை… …முதல் பத்து பக்கம் படித்தும் இது சரிவராது என்றால் அதை போட்டு விடும் பழக்கமும் இல்லை முடிவு வரை என்ன சொல்ல வருகிறார்கள் என பார்ப்பது உண்டு

36. ஆன்டி ஹீரோ கதை பற்றிய உங்களுடைய கருத்து:

நல்ல கேள்வி…பல வருடங்கள் கழித்து நான் எட்டி பார்த்த எழுத்துலகில் பாதிக்கு ஆன்டி ஹீரோ கதை தான் கேட்கிறார்கள்… எழுதுகிறார்கள் .. கதையின் கரு அப்படி என்றால் தவறு இல்லை …ஆனால் ……நிஜத்தில் உலாவரும் பாதிப்பேர்  ஆன்டி  ஹீரோ…அதற்காக அருமையான அற்புதமான நிஜ ஹீரோக்கள் இல்லை என்று இல்லை…அநேகம் ஆன்டி ஹீரோ விரும்பி கேட்டு படிப்பது பெண்கள் தான் போலும்…நிஜத்தில் அப்படிப்பட்டவர்களை விரும்புவார்களா என தெரியவில்லை..என்ன உளவியல் காரணம் என்றும் புரியவில்லை..ஆன்டி  ஹீரோ மோசமாக இல்லாத பட்சத்தில் தவறு இல்லை

37. காதலும் கற்று மற; கற்ற காதலை மறவாதிரு அதற்கான விளக்கமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :

ஹா… ஹா… நல்ல ஆளுகிட்டே போய் இந்த கேள்வி கேட்குறீங்க…? காதல் அது நான் வளர்ந்த நாட்டில் ஏராளம்… அதுக்கு வயது வரம்பு இல்லை…இந்த காதலும் கற்று மற  …கற்ற காதலை மறவாதிரு ! தலைப்பே நாலு பக்கத்துக்கு எழுத தூண்டும் வேணாம் …

காதலியுங்கள் முதலில் உங்களை … ! உங்கள் லட்சியத்தை ! உங்கள் எண்ணங்களை.. ! கண்களில் விழுந்தவள் என்னவள் / விழுந்தவன் என்னவன் என்ற கண்டதே காதல் தோன்ற முதல் ஒரு நிமிடம் சிந்தித்தால் நல்லது..ஏன் கற்க வேண்டும் ? அப்புறம் ஏன் மறக்க வேண்டும்? அப்புறம் என் மறவாதிரு என்று ஒரு வாக்கியம்? யார் சொல்லிவைச்சுட்டு போனாங்க?

38. இன்றைய பெண்களின் முன்னேற்றம், வாழ்வியல் மாறுபாடுகள் பற்றி சில வரிகளில் சொல்வதாக இருந்தால்:

நிறைய மாற்றம் வந்திருக்கு… வாழ்வியல் சூழ்நிலைகளும் முற்றிலும் மாறிவிட்டது ..முன்பு எல்லாம் பெண் எழுத்தாளர்கள் குறைவு..தற்பொழுது நிறையபேர்…பல சோதனைகளையும் தாண்டி சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறார்கள்… படைக்க துடிக்கிறார்கள்…ஒரு பெண்ணானவள் எத்தனை பதவிகளை சுமந்து கொண்டு இருந்தாலும்…மூச்சு விட முடியாது திக்கு முக்காடினாலும் முன்னேற துடிக்கிறாள் …துடிப்பவளின் நாடியை தட்டி கொடுக்க வேண்டும் …வெட்டி விடாதீர்கள்…ஒவ்வொரு பெண்ணும் ஒரு குடும்பத்தின் …ஒரு நாட்டின் அஸ்திவாரம் …அவள் இல்லை என்றால் எல்லாமே ஆட்டம் காணும்…அவளது எண்ணங்களை  மிதியாது மதித்து உதவவில்லை என்றாலும் ஊக்கம் கொடுக்க வேண்டும் … இங்கு எத்தனை பெண்கள் எவ்வளவு நிர்பந்தத்தின் மத்தியில் தமது திறமைகளை வெளி கொண்டு வர போராடுகிறார்கள்…பெண் என்பவள் எதையும் போராடி போராடி தான் பெற வேண்டும் …எல்லாம் அத்தனை இலகுவாக கிடைத்து விடுவது இல்லை… இது பெண் வாங்காமல் வாங்கி வந்த சாபமோ இந்த மோசமான உலகில் ?

39. நீங்கள் எழுதிய கதைகளில் மனதை கவர்ந்த  ஒரு காட்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:

எல்லாமே நான் பிடித்து எழுதிய காட்சிகள் தான் அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்

‘எங்கே என் மனம்’அதில் ஹீரோ சந்தோஷ் அவன் அநாதை என உணரும் தருணம் …தன்னை தத்து எடுத்த தாய் மடியில் சாயும் அந்த காட்சி …அப்புறம் ‘நிலாவே வா’ நாவலில் ஹீரோ அக்சய் பைத்தியக்காரன் போல காணாமல் போன மனைவியை தேடும் காட்சிகள் அத்தனையும் …அப்புறம்  மற்ற நாவல்களில் நிறைய இருக்கு

 

அத்தனை கேள்விகளும் அருமையான முத்துக்கள் …ஆனால் நம்ம பதில்கள் பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும்.. குட்டி  குட்டி பதிலாக தரமுடியவில்லை தோழி

மாற்று கருத்து வரவேற்கப்படும்…இப்படி ஒரு வாய்ப்பு தந்தத்துக்கு மிகவும் நன்றிகள் தோழி …

கண்மணி பெண்மணி ராணி முத்து என ஒன்றும் விடாமல் சாந்த கட்டி எடுத்து வரும் தோழி அள்ளிக்கொண்டு வந்து தந்திருக்கிறார்

ஏழு நாளும் வேலை…நேரம் காலம் கிடையாது.. ஆகையால் ஆன்லைனில் படிக்க முடிவதில்லை …கண் எப்படா தூங்குவே என்று கெஞ்சும்…வேலை-குடும்பம்—பருப்பு-பொறுப்பு அதிகம்..தங்களது படைப்புகள் புத்தகமாக இருந்தால் சொல்லவும் அடுத்த பார்சலில் போட்டு விடுவார்கள். அருமையான அன்பான புரிந்துணர்வான ஒரு நட்பை காட்டிய கடவுளுக்கு நன்றிகள் சொல்லி கொண்டு…விடை பெறுகிறேன்.

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைக்கான எழுத்தாளரின் கேள்வி பதில் அதிகமாக போனதால் அப்படியே கொடுத்திருக்கிறேன்…

மீண்டும் நாளைய அறிமுகத்தில் சந்திக்கலாம்

எழுத்துலகை விட்டு சென்றாலும் உங்களுடைய எண்ணங்கள் ஈடேறிடவும், சிந்தனைகள் யாவும் செயல்படவும், சாதனைகள் பல படைத்திடவும் என்னுடைய மனமார்ந்த

வாழ்த்துக்கள்

 

இன்றைய அறிமுகப் படலத்திற்கான கேள்வி, கருத்துகளை தாராளமாக தெரிவித்து கேட்டுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்துங்கள்

நன்றி

ஆனந்த ஜோதி.

 

Balladidf |
Laloufamily |
Shiraa14 |
Unblog.fr | Annuaire | Signaler un abus | Mapetitecouturefacile
| Arati Yoga
| Toutpourvotrechien