NOVELS

New Novel_S.Jovitha_காற்று வரும் ஜன்னலில் ஓர் காதல் Chp 126-END

126

“மாப்பிள சத்தியன்” என அவர் திணற, அவனும் புரிந்து கொண்டு,

“மாமா நீங்க என்ன சொல்ல வரீங்களோ? அதையே நான் விஹாகிட்டே சொன்னேன். அவரை விட்டுடலாம். இனிமேல் அவராலோ, அந்தக்குடும்பத்தாலோ எதுவும் நடக்காது. நடந்தா என்ன நடக்கும்? என நான் ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் பிளைட் ஏறுவேன்” என்று அவன் தீர்க்கமாக சொல்ல, விநாயகமூர்த்தி அவனது  கரத்தை எடுத்து கண்களில் ஒற்றினார். அக்ஷ்ரன் தனது மொபைலை எடுத்து நண்பனிடம்  விஷயம் சொல்ல, அவனும்,

“நீ யோசிக்காதே! நான் பார்த்துக்கிறேன். பயல் இந்தியாவில் என்ன பிளான் பண்ணாலும், என் கண்ணுல இருந்து தப்ப முடியாது” என சொல்லி வைத்தான்.

அங்கே சத்தியனை விட்டாச்சு என அறிந்த அடுத்த நொடி, மீனாட்சி அண்ணனின் முன் வந்து நின்றார். அவரைப்பார்க்கவே பிடிக்காது விநாயகமூர்த்தி முகம் திருப்பிக்கொண்டார்.

“அண்ணா! எனக்கு வேற வழி தெரியல.. என்னை மன்னிக்க சொல்லி கேட்டு வரல. ஆனா இனி என் பையன், சஸ்வி விசயத்துல தலையிடமாட்டான். எனக்கு என் பிள்ளைங்க முக்கியம். நம்ம குடும்பம் இப்படி பிளவு பட்டு, சிதறிப் போகும் என நான் நினைக்கல. நான் ஒண்ணு நினைச்சு பிள்ளையார் சுழி போட, ஆனா.. அது” என அவர் அக்ஷ்ரனை பார்த்த பார்வையில் அத்தனை வன்மம்.

மற்றவர்கள் கவனிக்கத் தவறவில்லை. அக்ஷ்ரனோ மெல்ல புன்னகைத்து, அவரருகே வந்தவன், யாரும் எதிர்பாராத போதே மீனாட்சி முன் முழங்காலில் மண்டியிட்டு நின்றான். சஸ்விஹா,

“ஷரா! உங்க ஸ்டேட்டட் என்ன? நீங்க..” என அவள் வெடிக்க. அவன் திரும்பாது கை உயர்த்தி அவளை அடக்கிவிட்டு, மீனாட்சியைப்பார்த்தான்.

அவன் மீது இருக்கும் வன்மத்திலும், வெறுப்பிலும், அவன் எதிரே நின்று பேச ஆரம்பித்தால், அவர் காது கொடுத்துகேட்கப் போவதில்லை என அவரது தோரணையில் இருந்து கண்டுகொண்டான். யார்? எப்படி? என அறிந்து அவர்கள் வழியிலே மடக்கும் திறமை கொண்டவன், அவர் விசயத்திலும் தோற்கவில்லை. மீனாட்சி திகைத்து, சமைந்து, நிற்க, இவன் அதை சாதகமாக்கி பேசிவிடும் நோக்கில் ஆரம்பித்தான்

“நீங்க என் அம்மாவுக்கு சமம். அவங்ககிட்டே எப்படி உரிமையாக பேசுவேனோ அப்படி உங்ககிட்டேயும் பேச விரும்புறேன்…உங்க மகனுக்கு நான் கொடுத்த தண்டனைக்கு ஒரு தாயா என்னை நீங்க மன்னிக்க வேண்டாம். ஆனா ஒரு பெண்ணா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. அப்புறம் நீங்க என்ன தண்டனை தந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என அவன் ஆரம்பிக்க, மற்றவர்கள் அவனை வியப்பதா? இல்லை மீனாட்சி என்ன கோலம் போடப்போகிறார் என பயம் கொள்வதா? என பேச்சிழந்து தவித்தார்கள்.

சஸ்விஹாவோ அவன் நின்ற கோலமும் விரும்பாது, தன் குடும்பத்தால் அவன் அடுத்தவர்களிடம் அடிபணிவதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, தலையை தாங்கிக்கொண்டு தொப்பென்று படிக்கட்டில் அமர்ந்து விட்டாள். அக்ஷ்ரன் தொடர்ந்தான்.

“அம்மா! அழகா எதிர்கால வாழ்க்கைக்கு பிளான் போட்டுக்கொடுத்த நீங்க, அவரையும் அடுத்தவங்க போற்றுவது போல நெறிப்படுத்தி இருக்கலாம்.”அவன் சொன்னதும், மீனாட்சி முகம் மாறியது.

“சாரிம்மா..எனக்கு நேராகவே நிஜங்களை  பேசித்தான் பழக்கம்.”என மன்னிப்புக்கோரி விட்டு தொடர்ந்தான்.

“அவர் பிகேவியரில் முரடனாக இருந்தாலும், தான் விரும்பிய, மாமன் மகளை படிக்க வைத்து, கோல்டு மெடலிஸ்ட்டாக்கியவர். பொறுப்பான இந்த குணம் கொண்டவர், தானாகவே குறைகளை கூட்டிக்கொண்டு போகாது கொஞ்சம் நற்பழக்கத்தோடும்  இருந்திருக்கலாம்.” அவன் குரலில் ஏகத்துக்கும் அக்கறை தொனித்தது.     அந்த உண்மை மீனாட்சியை சுடவைத்தது.

“சஸ்விஹாவின் கையில் மோதிரம் மாட்டத் தெரிந்தவர், அதன் மதிப்பையும், அருமையையும் தெரிந்து கொண்டிருக்கலாம்…அவங்களை நாடு விட்டு, நாடு அனுப்ப எத்தனை தடவை யோசித்து  இருப்பார்? வேற வழியில்லை எனும் பொழுது, அனுப்பி வைத்தவர், அவங்களும், அதுவும் ஒரு பெண்ணா அவருக்கு நிறைய செய்து இருக்காங்க.”

“….”

“பிசினஸ் பண்ண இன்வெஸ்டிமென்டுக்கு பணம்  கொடுத்தவங்க, அதுக்கு என்ன பலன்? ஒரு நூலை பிடிச்சுக்கிட்டு இவ்வளவுக்கும் அவர் எந்த நிலைக்கு உயர்ந்து இருக்க வேண்டும்? செய்தாரா?” அவன் நேரிடையாகவே கேட்டதும் உண்மை உறைக்கவும், மீனாட்சிக்கு மகனின் வேண்டாத சகவாசமும் ஊதாரித்தனம் கண் முன்னே ஆடியது.

“வீடு கட்ட வேண்டும் என்றதும், சஸ்விஹா இசைந்து தானே போனாங்க. அவர் எது கேட்டு இவங்க மறுத்து இருக்காங்க? ஆனா அந்த வீட்டின் செங்கல் கூட அவங்களுக்கு சொந்தம் இல்லை. இத்தனைக்கும் அவங்க அந்தக்குளிரில் ரத்தம் உறைய உழைத்து அனுப்பிய பணம் தான் உங்க வீட்டுல ஒவ்வொரு கல்லாக மாறி இருக்கு” அவன் ஒரு வித குரலில் அதை சொல்ல, விநாயகமூர்த்திக்கு தன் மகளை தானும் படுத்திய பாடு நினைவுக்கு வர, கண்களை துடைத்து விட்டுக்கொண்டார்.

“எத்தனையை  கடவுள் உங்க மகனுக்கு கொடுத்திருக்கார்மா. அளவுக்கு மீறிய உரிமையும், ஆதிக்கமும், சஸ்விஹா மீதான மோகமும், இப்போ எங்கே கொண்டு வந்து இருக்கு?” அவன் வருத்தத்துடன் கேட்டான். மீனாட்சி சேலைத்தலைப்பால் வாயை பொத்திக்கொண்டார் விட்டால் வெடித்து அழுதுடுவார் போலிருந்தது .

“நான் நேற்று வந்தவன்மா, மூன்றாம்  நபர், ஆனா நீங்க  எல்லோரும் ஒரே ரத்தம் ..உங்களுக்கு எதிரா நான் என்றும் இருக்க மாட்டேன். சொல்லுங்கமா உங்க மகன் மனம் திருந்தி, கெட்ட பழக்கங்களையெல்லாம் விட்டொழித்து, ஒரு மனிதனாக மாறுவாரா? மாற வைப்பீங்களா?” இப்பொழுது ஒரு முடிவோடு வந்தது அவனது குரல். சாத்தியமான காரியமா? என அவர் மனது கேட்க,  கலங்கிய விழிகளால் அவனைப்பார்த்தார்.

“அவருக்கு இங்கேயே பிசினஸ் டெவலப் பண்ண நான் ஹெல்ப் பண்றேன். அவரை ஒரு நிலைக்கு கொண்டு வருவது என் பொறுப்பு. ஆனால் அவர் மனிதனாக மாறினா மட்டும்” என சொல்லிக்கொண்டு வந்தவன் இடை நிறுத்தி விட்டு சஸ்விஹாவைப்பார்த்தான்.

மீனாட்சி, சசிரேகா உட்பட விறைத்துப்போய், வியந்து, அவனது பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அடுத்து அவன் சொன்னதைக்கேட்டு எல்லோருமே மூர்ச்சையானார்கள்.

“உங்க மகனால் தான்  சஸ்விஹாவை எனக்கு தெரிய வந்திச்சு. அவரோட சிறு வயசுல இருந்து அவங்க மீது எவ்வவவு காதல் இருந்திருந்தா, அவர் இந்த நிலைக்கு போயிருப்பார்?”அவன் கேட்க சஸ்விஹா காதுகளை பொத்தினாள். மீனாட்சி அதைக்கவனித்தார்.

“தன்னைத் தவிர வேறு யாரும் அவங்களைப் பார்க்க கூடாது.. சொந்தம் கொண்டாடக்கூடாது.. என்ன கொஞ்சம் கூடுதலான பொஸசிவ்னஸ்  தான். ஆனா அதுவே எத்தனை டார்ச்சராக இருந்திருக்கு சஸ்விஹாவுக்கு” அவன் குரலில் ஓர் வேதனை கலந்த குற்ற சாட்டு தெறித்தது.

“.,,.”

“உங்க பார்வையின் வன்மத்தின் நெருப்பு, என்னை எதுவும் செய்திடாது. ஆனால் என் அமமா அடுத்தவர்களின் நெருப்பில், என்றும் நீ உனக்கு ஆதாயம் தேடவே கூடாது! என சொல்லித்தான் வளர்த்தாங்க. எனக்கு கை கொடுத்து தூக்கிவிட்டுத்தான் பழக்கம்.. இந்த அக்ஷ்ரன் ஆனந்தகிருஷ்ணா என்றும் வழிகாட்டி, பழிவாங்கும், வலி கொடுக்கும் பிறவி இல்லை”

“….”

“உங்க அண்ணாவின், சஸ்விஹாவின் வாயால், பாராட்டு பெறும், அவங்க விரும்பும் நிலைக்கு உங்க மகன் மாறினால், அதுக்கு நீங்க உத்தரவாதம் தந்தால், நான் சஸ்விஹாவை கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். இப்பவே பிளைட்டுல ஏறிடுறேன். உங்க மகனை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும், அது சஸ்விஹாவின் தனிப்பட்ட விஷயம். ஆனால் நான் விலகிடுறேன்மா.” என அவன் சொல்லிவிட்டு எழுந்து கொண்டான். எல்லோரையும் பார்த்து கரம் கூப்பி,

“சஸ்விஹா இனி இது உங்க குடும்ப விஷயம். எந்த உதவி என்றாலும் நண்பன் எனும் முறையில் என்னை அணுகலாம்” என அவன் சொல்ல, அவளோ அவனது ஒவ்வாத பேச்சினை கேட்டுக்கொண்டிருந்தவள், மயங்கி விடுவாள் போல இருந்தது. அதிர்ச்சியுடன் விழுந்து விடாது, வந்தவள், எட்டி அவனது சட்டையை கொத்தாக பற்றி,

“நல்லவனா இருக்கலாம்.. ஆனா இப்படி என் மனசை கொன்னுட்டு போற அளவுக்கு இருக்க கூடாது!”என அவனைப்பார்த்து முதல் முறையாக சீறினாள். அவன் கண்களை மூடித்திறந்தவன், உடலை  விறைப்பாக வைத்துக்கொண்டான்.

“நீ எல்லோருக்கும் வழிகாட்டி! ஆனா எனக்கு நீதாண்டா வாழ்க்கை! நீதாண்டா என் சுவாசத்தில் ஓடும் காற்று! நீதான் என் ஜன்னலில் வீசும் காற்று! இந்தக்காற்றை மட்டுமே சுவாசிப்பவள், வேறு எந்த காற்றையும் சுவாசிக்க அனுமதியேன். நீ விலகினா, நான் காலம்பூரா சஸ்விஹா விநாயகமூர்த்தியாகத்தான்  வாழ்வேன்! போ!” என அவள் அவனை உதறவும், அவன் ஒரு மூச்சை இழுத்துவிட்டு, வெளியே எட்டு வைத்தான்.

127

மீனாட்சி  குரல்,

“தம்பி நில்லுங்க! நீங்க இப்படி பேசியதுக்கு அப்புறமும் நான் மனுஷத்தன்மையோடு நடந்துக்காது போனா, என் அண்ணனின் ரத்தம் இல்லைன்னு ஆயிடும்.” அவர் குரலில் குற்ற உணர்வும், வேதனையும், தொனிக்க சொல்லவும், அவன் நின்று திரும்பினான்.

“என் பசங்க மீது இருந்த பாசத்தால் என்னவெல்லாமோ பண்ணிட்டேன். உங்களை பார்க்கவே கூச்சமாக இருக்கு. உங்களை பெத்த புண்ணியவதி நல்லா இருக்கணும்” என அவர் கரம் கூப்பி அவன் அன்னையை வாழ்த்தியதைக்கேட்டதும், அந்த தனயனின் முகத்தில் வந்த கனிவினை பார்த்த எல்லோரும் என்ன பிறவிடா? என வியந்து தான் போனார்கள்.  கூப்பிய கரத்தை  அவன் எட்டிப் பிடித்து,

“அம்மா ஒரு மகனிடம் தாய் என்றும் கரம் கூப்பவே கூடாது. அது அவனுக்கு ஏழு ஜென்மத்துக்கும் பாவத்தையே கொடுக்கும்” என சொன்னதும் மீனாட்சி விக்கித்துப்போய் அழ, வாழ்நாளில் எவரையும் அவன் முன் அழ வைத்து அறியாதவன், நெகிழ்ந்து போனான். அக்ஷ்ரன் கனிவுடன்,

“அம்மா” என அழைத்து தன்னோடு அணைத்துக்கொண்டான்.

சஸ்விஹா விழிகளில் நீர் நிறைக்க, அவனை அளவு கடந்த காதலுடன் செல்லமாக முறைத்துப்பார்த்தாள். இருக்காதா? எப்பேற்றப்பட்ட மீனாட்சியையே அவன் மாற்றிவிட்டானே. யாராச்சும் கனவு கண்டு தான் இருப்பார்களா?  நினைச்சுத் தான் பார்த்திருப்பார்களா? மீனாட்சி இப்படி மாறுவார் என? அவர் மாற எங்கோ பிறந்தவன் வந்து பாடம் கற்பிக்க வேண்டும் என விதியோ? என எண்ண வைத்தது. மற்றவர்கள் திகைப்பிலிருந்து மீளாது இருந்தார்கள்.

“பெத்த புள்ள என் கழுத்தை நெரிச்சானே.. காலால் அடிக்க வந்தானே.. இப்போ எவரோ பெத்த புள்ள என்னை மதிச்சு பேசுறான் கொண்டாடுறான்” அவர் சொல்லி குலுங்கி அழவும், விநாயகமூர்த்தியும் ஆயிரந்தான் இருந்தாலும், தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும் என்பதை நிரூபித்தார். தங்கைக்கு அருகே ஓடி வந்து அவரது தலையை வருடிக்கொடுத்தார்.

எல்லோருக்குள்ளும் இருக்கும் தாய்மை ஒன்றுதான். அதை சரியான முறையில் வெளியே கொண்டு வருவதும், போற்றிக்கொள்வதும் ஒவ்வொரு தாயிடமும், பிள்ளையிடமும் தான் தங்கி இருக்குறது.

“என்னம்மா இது? ஓர் தாய் அழுதா அது பிள்ளையை பாதிக்கும்ன்னு என் அம்மா சொல்வாங்க. தாயோ, தாரமோ, ஒரு பெண்ணை எந்தக்காலத்திலும் கண் கலங்க விடக்கூடாதுன்னுற  கொள்கை உடையவன். என் முன்னாடி” என அவன் அவரை அன்பாக கண்டித்தான்.

விநாயகமூர்த்தியும் தலையாட்டி  அதை ஆமோதித்தார்.  மீனாட்சி கண்ணைத்துடைத்துக்கொண்டு அவனது முகத்தைத் தொட்டு,

“ராசா நீ நல்லா இருப்பே! அவ உன் சஸ்விஹா, அவளை நீ யாருக்கும் விட்டுக்கொடுக்க வேணாம்! உங்க ரெண்டு பேருக்கும் தான் பொருத்தம். ஆண்டவன் அம்சமா போட்டு இருக்கான். என் பையன் அவ மேல வெறித்தனமான ஆசை வைச்சு இருக்கான்.”அவர் சொல்ல, அவன் கண்களில் அத்தனை கனிவு.

அதைப்பார்த்தவர் கண்கள் மேலும் கலங்கியது. தான் பெற்ற பிள்ளைகளின் கண்களில் இப்படியான பார்வையை என்றும் பார்த்திராதவர் அல்லவா? அவனது கன்னத்தை வருடிவிட்டு தொடர்ந்தார்.

“ஆனா அது அவ அழகு மேல தான்னு எனக்கு போகப்போக அவனோட  நடத்தையில புரிஞ்சுடுத்து. அவனுக்கு உண்மையான விருப்பம் அவ மேல இருந்திருந்தா, அவளை தப்பாக பேசிய நீலகண்டனை உண்டு இல்லைனு பண்ணி இருக்கணும்..”அவர் உண்மைகளை உணர்ந்து பேச ஆரம்பித்தார்.

“…”

“இல்லை யாரும் என்னவும் சொல்லிட்டு போகட்டும், நான் உன்னை நம்புறேண்டின்னு, அவளை அந்தக்கொடுமையான செக்கப்புக்கு இழுத்துப் போயிருக்கக் கூடாது!” அதை சொன்னதும், அக்ஷ்ரன் முகம் ஒரு நொடி இறுகி, பின் சஸ்விஹாவின் விழிகளின் தீண்டலால் இளகியது.

“நானும் ஒரு பெண்ணைப்பெத்தவ தான், இவனோட குணத்தால தான், அவ என்னை விட்டு தூரமாயிட்டா. அவளுக்கு இப்படி ஒரு நிலை வந்தா நான் தாங்குவேனா? அண்ணன் பொண்ணாக இருந்தாலும், அவளும் என்னோட ரத்தம் தான். அவ வாழணும்.. அதுவும் உன்கூட” என சொன்னார். விநாயகமூர்த்தி தங்கையைப்  பார்த்த பார்வையில் பாசம் இழையோடியது ,

“அண்ணா என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க. புத்தி, அதுவும் சுயநல புத்தி வந்து  என் கண்ணை மறைச்சுடுத்து. எனக்கு சசி மேல எந்த வெறுப்பும் இல்லை. அவளை பகடைக்காயா வைச்சு, சத்தியனை வெளியில கொண்டு வர நினைச்சேன். ஆனா அவ என்னிக்கும் என் மருமகள் தான்” என சொல்லிவிட்டு சசிரேகாவைப்பார்த்து,

“நீ என்னை மன்னிச்சுடும்மா” என்றவர். பின்  சஸ்விஹா பக்கம் திரும்பி,

“உன்னைப்பார்க்கவே எனக்கு வெட்கமா இருக்கு. இருந்தாலும் என்னை நீயும் மன்னிச்சுடும்மா! அது உன் வீடு! நீ”என அவர் தொடங்க, அவளோ,

“அத்தை அது என்னிக்கு உங்களுக்குன்னு  அப்பா சொன்னாரே, அது உங்களதாகவே இருக்கட்டும்” என்றாள். அவர் கலங்க,

“வரேன்”  என எல்லோரையும் பார்த்து சொல்லிவிட்டு, சசிரேகாவை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறினார். அவர்கள் தலை மறைந்ததும்,

“கடவுளே பிரச்சனை வருது, வந்த வேகத்தில் மறையுது, என்ன சாபமோ?” என வைதேகி மேலே பார்த்து கை கூப்பினார். அக்ஷ்ரனும்,

“மாமா எனக்கு வேற்றுகிரகத்துல இருக்குற பீலிங்ஸ்.. தூங்கவே  விடாது உங்க பொண்ணு அலறியே என்னை வரவழைச்சுட்டா.. இன்னும் ஏதாச்சும் பாக்கி இருக்கான்னு? கேளுங்க” என அவன் மெல்லிய புன்னைகையுடன் கேட்கவும்,

சஸ்விஹா அமைதியாக “அப்பா அவரை முதல்லே போக சொல்லுங்க! அவர் இஷ்டத்துக்கு டயலாக்ஸ் பேசிக்கிட்டு இருப்பார்,   நான் அதை கேட்டுகிட்டு, என் மனசை கொன்னுக்கிட்டு இருக்கணும்” என அவள் கோபத்தோடு சொல்லிவிட்டு, சட்டென்று உள்ளே போய்விட்டாள்.

அவனும் வாய் விட்டு சிரித்தவனாக, “மாமா ஷாக் ட்ரீட்மெண்ட் உங்க சிஸ்டருக்கு கொடுத்தது போல, உங்க பொண்ணுக்கும் கொடுக்கவா?” எனக்கேட்டான்.

“டேய்! போடா!” என உள்ளே இருந்து சஸ்விஹாவின் குரல் கோபத்தோடு வந்து விழுந்தது.

“எங்கே மேடம்? வீட்டுக்கா? இல்லை பாரிஸுக்கேவா?” என அவன் சத்தமாக எட்டி உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான்.

“ஷரா!” என அவள் கத்திகொண்டே, அவனால் உடைத்தெறிந்திருந்த கட்டில் காலோடு, வெளியே வரவும், பெரியவர்கள்,

“சஸ்வி!” என அதட்ட, அவனோ ஜம்ப் செய்து வெளியே ஓடியவன்,

“நான் பாரிஸுக்கே ஓடிடுறேன் பேபி!” என்றுவிட்டு காரில் ஏறிப்பறந்தான்.

“என்ன பொண்ணு நீ? இப்படியா ஓட விரட்டுவே?” வைதேகி மகளை அடிக்க கை ஓங்கவும், அவளும் முறைத்தவாறு,

“எங்கே ஓடிடப்போறார்? இந்த சஸ்விஹாவை விட்டு போயிடட்டும் பார்க்கலாம்” என வீறாப்பாக சொல்லிவிட்டு, அலங்கோலமாக இருந்த அறையை சுத்தமாக்க  நுழைந்து கொண்டாள்.

போகும் வழியிலேயே அக்ஷ்ரன் உதடு குவித்து, ஒரு செல்பி எடுத்து, அதை சஸ்விஹாவுக்கு வாட்சப் பண்ணவும், வேலையாக இருந்தவள் மொபைலின் சத்தம் வரப் பார்த்தாள். அக்ஷ்ரனின் வாட்சப் மெசேஜ் எனக்காட்டியது  அது. என்னவென்று எடுக்கப் போனவள் பின்,

“உன்னோட  பேச்சின் சூடு இன்னும் எனக்குள் ஆறவில்லை! இரு கல்யாணம் முடியும் வரை உன்கிட்டே பேசுறேனான்னு பாரு” என அதைப்பார்த்து சொல்லிவிட்டு, தனது வேலையத்தொடர்ந்தாள்.

தொடர்ந்து கிளிங், கிளிங் என அவனது மெஸேஜ்ஜுக்களாக வரிசை கட்டவும், சிறு முறைப்புடன் மொபைலை எடுத்து அணைக்கப்போனவள், திரையில் அவனது ஸ்டிக்கர்களைப் பார்த்ததும், இவளின்  கோபம் நான் வேணா பறந்து விடவா? எனக்கேட்டது.

அதை திறந்து பார்க்க துடித்த விரலை மடக்கி, சைலண்டில் வைத்துவிட்டு, விட்ட சமையலை தொடர சமையலறைக்குள் நுழைந்தாள். இருந்தும் மனது அவனிடமே. சமைக்க உதவி செய்தாலும், அவன் போய் சேர்ந்திருப்பானா? இல்லை தூங்கி இருப்பானா? என யோசனையாகவே இருக்க, நெற்றியில் அடிப்பதும், பின் காய்கறிகளை வெட்டுவதுமாக இருந்தாள். வைதேகி பார்த்துவிட்டு,

“கட்டில் காலால் அவரை விரட்டும் போது யோசிச்சு இருக்கணும்” என கடித்தார். அவளோ,

“அப்போ அவர் பேசிய பேச்சுக்கு அவருக்கு விருந்து வைக்க சொல்றியாம்மா?” என முறைத்தாள். அவர் பதில் சொல்ல வாயெடுக்க, விநாயகமூர்த்தி தனது மொபைலை கொண்டு வந்து,

“சஸ்வி! மாப்பிள உனக்கு எத்தனவாட்டி மெசேஜ் போட்டாராம். ஏன் பதில் போடலை?  இந்தா அவர் தான் லைனில்” என நீட்டவும், அவளோ,

“அப்பா! நான் யார்கூடவும்  பேசத்  தயாராக இல்லை.” என வேண்டுமென்றே சத்தமாக சொன்னாள். பெற்றவர்கள்,

“சஸ்வி!” என அதட்டவும், அக்ஷ்ரன் மறுமுனையில் சிரிப்பது கேட்டது.

“மாமா! மேடம் பேசமாலேயே இருக்கட்டும். நான் வைச்சுடுறேன்” என்றுவிட்டு வைத்தும் விட்டான்.

வித்யா வந்து சேரவும், பெரியவர்கள் நடந்ததை சொன்னதும், அவளுக்கு மூச்சடைப்பேன் என்றது.  சஸ்விஹாவைக் கட்டிக்கொண்டு கலங்க, அவளோ  தோழியைப்பார்த்து, ஜென் முத்திரை பிடித்தாள்.

128

அகல்யா-ஆனந்தகிருஷ்ணா தம்பதிகளை செல்லமாக ஆட்டிவைக்கவே பிறந்தவள் அக்ஷ்யா. தம் தேவதையை கொண்டாடியே வளர்த்தார்கள். அக்ஷ்யா வெளிநாட்டில் பிறந்த சில பிள்ளைகள் போல வெளுத்தது எல்லாம் பால் எனும் நம்பும் குணம் கொண்டவள். அழகுக்கும், அறிவுக்கும் குறைவைக்காத கடவுள் அவளின் ஆயுளுக்கு குறை வைத்தே போனான்.

அக்ஷ்ரன் பிறந்தும் தந்தையின் செல்ல மகளாகவே அவள் இருந்தாள். அவன் மூன்று வயது இளையவனாக இருந்தாலும், இருவரும் நண்பர்கள் போலவே தான். ஒருவருக்கு, ஒருவர் எந்த ஒளிவு மறைவும் வைத்தது இல்லை. அவள் பெற்றவர்களிடம் பகிரமுடியாதவைகளை பிரெஞ்சில் கூடப்பிறந்தவனிடம் சொல்லும், அவனை மதித்து அவனின் கருத்துகேட்கும் குணம் கொண்டவள்.

பிள்ளைகள் இருவரும் எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாது, ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பதை, பெரியவர்கள் நித்தமும் கண்டு பூரித்தார்கள். தம் கண்ணே பட்டுப்போகும் என நினைத்துப்பார்த்தார்கள் இல்லை. அக்ஷ்யா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் அக்ஷ்ரன், அவள் வயதுக்கு வரவும், அது இன்னும் அக்கறையுடன் கூடிய, பொறுப்பான பாதுகாப்பான, பாசமாக மாறியது. அவள் எங்கே சென்றாலும், எது செய்தாலும், அவனுக்கு சொல்லாமல் செய்தறியாள். இருவரது மொபைலும் லொகேஷன் கனெக்ட்டிங் மோட்லதான்.

பருவ வயது வந்ததும் அவள் பெற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து, தனக்கு எதுவேண்டுமென்றாலும் அக்ஷ்ரனிடமே கேட்டுபெற்றுக்கொண்டாள். அவனும் அக்கா என்று அழைத்தறியான். அவனது பிரண்டு போலவே, “ஹாய் அம்மு” இல்லை “அலோ மை பிரின்சஸ்” என்று தான் அவளை அழைப்பதும், அவளும் “ஷரன்” என்றே தான் விளிப்பாள்.

அக்ஷ்யா பேஷன் டிசைனிங் கல்லூரியில் இணைந்த தருணம். அதற்காக அவள் மூன்று வருட காலம் மேற்படிப்பை முடிக்க வேண்டி, தனித்து தங்கும் சூழ்நிலை வந்தது. கல்லூரிக்கு அருகேயே மகளுக்கு அப்பார்ட்மெண்ட் எடுத்துக்கொடுத்து, கூடவே பெற்றவரும் தங்கிவிடுவதாக திட்டமிட்ட போது, அவளோ மறுத்து,

“டாடி! நான் ஒண்ணும் மைனர் இல்லை. என்னை பேபி போல ட்ரீட் பண்ணாதீங்க! எனக்கு வெட்கமா இருக்கு. படிக்க வந்துட்டு, பேரன்ட்ஸ் கூடத்தான் அப்பார்ட்மெண்டுல இருக்கேன்னு என் பிரண்ட்ஸ் என்னை கிண்டல் பண்ணுவாங்க.. ப்ளீஸ் டாடி. நான் என்னோட பெஸ்ட் பிரண்ட்ஸ் கூட இருந்துக்குறேன்.. வீக்கெண்டில நம்ம வீட்டுக்கு வந்துடுவேன்” என ஒற்றைக்காலில் நின்றாள். வழக்கமாக எல்லா பிள்ளைகளும் பேசும் வசனங்கள் தான் .

அகல்யா அவர் பங்குக்கு தன் ஒற்றைக்காலில் நின்று மறுத்தும், ஆனந்தகிருஷ்ணா தயங்கி யோசிக்க, அவளோ அக்ஷ்ரனிடமே போய் நின்று, அவனது தோளை கட்டிக்கொண்டு சிணுங்கவும், அவன் பெற்றவர்களுக்கும், கூடப் பிறந்தவளுக்கும் இடையில் பாலமாகி, பெரியவளின் ஆசைக்கு பெற்றவர்களை சம்மதிக்க வைத்தான். அது எவ்வளவு தவறு என அப்பொழுது அவன் அறிந்திருக்கவில்லை.

வழக்கமாக மேற்படிப்பு படிக்கும் பிள்ளைகள். இவ்வாறு    பெற்றர்வகளை விட்டு பிரிந்து, போய் வெளியிடங்களில் தங்குவதும், வேண்டாத பழக்கவழக்கங்களுக்குள் வீழ்ந்து போவதும், இல்லையெனில் வீழ்த்தப்படுவதும், நடப்பவை தான்.  வார இறுதியிலோ, விடுமுறைகளிலோ  வருவதும் சகஜமான ஒன்று தான்.

ஆனால் வெளிநாடுகளில் நம்மவர் மத்தியில், பல பெற்றவர்கள் தலைகீழாகிக்கொண்டிருக்கும் உலகின் சூழலால் பயந்து, தயங்கியே பிள்ளைகளை முடக்குவதும், வேறு வழியின்றி ஒத்துக்கொள்வதுமாக இருக்கிறார்கள். அக்ஷ்யாவின் அப்பாவித்தனமான குணத்தால் அவளை தனியாக தங்க வைப்பதற்கோ, பிரிந்து இருப்பதற்கோ, விரும்பினார்கள் இல்லை. ஆனால் அவளோ அக்ஷ்ரன் மூலமே தனது காரியங்களை சாதிக்கும் பழக்கம் கொண்டவள், இந்த விஷயத்திலும் தோற்கவில்லை.

அவனும் பெற்றவர்களிடம் “பொத்தி, பொத்தி வளர்க்காதீங்க! போகட்டும்.. நாலு விசயங்களை அறியட்டும். அடிபடட்டும்.. அப்போதுதான் அவளுக்கும் உலகம் புரியும்.. சும்மா பொம்மை போல அவளை பாதுகாத்து, துடைச்சு ஷோ ரூமில் வைக்கிறதா நினைச்சு.. அவளின் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாத கோழையாக்கிடாதீங்க..” என அவன் சொன்ன போது அவர்களுக்கும் அது சரி தான் எனப்பட்டது.

“எங்கே போயிடப் போறாள்? இதோ எட்டுப் போய் பார்த்துட்டு வரலாம்”. என மனதை தேற்றிக்கொண்டு தான் ஒத்துக்கொண்டார்கள்.  எப்படி நாம் இழுத்துப்பிடித்தாலும், எது தலையில் எழுதி இருக்கோ? அவ்வாறே பிரம்மன் வழி நடத்திக்கொண்டு போவதும், விதி வளைவதும் தான் வாழ்க்கை.

அக்ஷ்யாவின் அழகிற்கு அவளுக்காக போட்டி போடும் இளவட்டம் அதிகமானது. அவளோ எவரையும் ஏறெடுத்தும் பாராது இருந்தவள், மனதை கலைக்கவென்றே வந்து குதித்தான் இந்தியாவிலிருந்து படிக்க அனுப்பப்பட்ட கோகுலவர்தன்.

ஒரேவெளிநாட்டு பையன்களையே பார்த்து சலித்தவளுக்கு, வித்யாசமாக தோன்றியவன நண்பனாக ஏற்றுக்கொண்டாள். அவனோ அவளது அழகினையும், அப்பாவித்தனத்தையும் அனுபவிக்க பிறந்தவன் போலவே அவளிடம் மயக்கும் வார்த்தைகளால் பேசிப் பழகவும். அப்படியானவார்த்தை ஜாலங்களையோ, மயக்கும் பார்வைகளையோ கேட்டுப், பார்த்து, இராதவள், விழுந்து தான் போனாள்.

எதுவென்றாலும் அக்ஷ்ரனிடம் பகிரும் பழக்கம் கொண்டவளுக்கு, இதை எப்படி அவன் எடுத்துகொள்வானோ? எனும் தயக்கம் முதல் முறையாக எட்டிப்பார்க்க வைத்தது. விளைவு எதுவுமே தெரியாமல் பார்த்துக்கொண்டாள். எல்லாம் கோடை விடுமுறை விடும் வரை தான்.

129

விடுமுறைக்கு வீட்டுக்குள் மகள் வருவாள் என வீட்டினை இரண்டு படுத்திக்கொண்டிருந்த பெற்றவர்களுக்கு. வந்ததோ ஒரு அழைப்பு. அதுவும் இந்தியாவிலிருந்து. அழைத்திருந்ததோ அவர்களின் செல்ல மகள் அக்ஷ்யாவே. இருவரும் திடுக்கிட்டு, திகைத்து, திணறி,

 “அக்ஷ்யா!” அதிர்ந்து கூவவும், அவளோ கூலாக,

“டாடி.. மம்மி.. நான் கோகுல் கூட இந்தியா வந்திருக்கேன். அவன் வீட்டுக்கு போகிறேன். திஸ் டைம் அவன் கூடத்தான் ஸ்பென்ட் பண்ணப்போறேன்.. சாரி டாடி.. மம்மி.. சாரி.. அவன் கூட அர்ஜெண்டா கிளம்புற மூட்ல உங்களுக்கு சொல்லலை..” என அவள் தான் செய்த காரியத்தின் வீரியம், விபரீதம், புரியாது பேசவும், முதலில் அதட்டியவாறு வந்தது ஆனந்தகிருஷ்ணாவின் குரல் தான்.

“அக்ஷ்யா! என்ன பொண்ணு நீ? என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? விளையாடாதே! நீ ஏர்போட்டில இருக்கணும்.. வெளியே போகக்கூடாது.. அப்பா.. அடுத்த பிளைட்டுல வரேன்.. என் கூட வந்துடு” என யோசிக்காது பாசத்தில், பரிதவிப்பில் அதட்டவும், அவளோ அவருக்கு மேலாக,

“டாடி என்ன இது பேபிகிட்டே பேசுறது போல பேசுறீங்க? நான் மேஜர் ..எனக்கு பிரீடம் இருக்கு.. நான் எங்கு வேண்டுமானாலும் போலாம்.. திஸ் டைம் வேகேஷன் இந்தியாவில தான்னு டிசைட் பண்ணிட்டேன்.. அதான் கிளம்பிட்டேன்” என அவள் சொல்ல, அகல்யா வீடியோ காலில் மகளை கனிவுடன்  பார்த்து,

“கண்ணம்மா! உனக்கு உலக அனுபவம்  பத்தாதுடா.. அப்பா, அம்மா, அதனால தான் கொஞ்சம் பயப்படுறோம்..  நீ இந்தியாவில விடுமுறையை கழிக்க வேண்டாம்ன்னு நாங்க சொல்லலை. ஆனா எங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நானோ, அப்பாவோ, அக்ஷ்ரனோ, வந்து இருப்போம்.. அதான் அப்பா பீல் பன்றார்” என மகளுக்கும், கணவருக்கும் இடையில் வரவும், அவளோ செல்லம் கொஞ்சியவாறே

“அய்யோ மம்மி!! லீவ் மீ அலோன்! பக்கத்துல இருக்குற பாரிஸ் யூனிவர்சிட்டிக்கு விட யோசிக்குற உங்ககிட்டே.. நான் இந்தியா ட்ரிப் சொன்னா அக்செப்ட் பண்ண மாட்டீங்க..அதான் இங்கே வந்துட்டு அப்புறமா கால் பண்றேன்” அவள் சொல்லவும்,

“அதுக்காக நீ இப்படித்தான் பொறுப்பில்லாம நடந்துப்பியா?” தந்தை குரலில் வருத்தமும், சிறிது கோபமும் எட்டிப்பார்க்க கேட்டதும்,

“டாடி..ப்ரீயா இருக்க விடுங்க.. ஷரன் என்ன சொன்னான்? நான் நல்லா அடிபடணும்.. கத்துக்கொள்ளணும்.. பொத்தி வைக்க வேண்டாம்ன்னு சொன்னான்லே.. நீங்க இழுத்துப்பிடிச்சுகிட்டு இருந்தீங்கன்னா நான் எப்படி நீங்க சொல்ற உலக அனுபவத்தை கத்துக்குறது?  சோ.. என்னை விடுங்க.. பீ கூல்.. ரிலாக்ஸ்.. ஷரனுக்கு மெசேஜ் போட்டு இருக்கேன்.. பை டாட்.. பை.” என அவள் வைக்கப்போக, இருவரும் பதறி துடித்தார்கள்.

“கண்ணம்மா? யார் பையன்? எப்படி? எங்கேன்னு ஒரு டீட்டைல்ஸ்சும் தராம” என ஆனந்தகிருஷ்ணா படபடக்கவும் , அவளோ,

“டாடி என்கூட படிக்குற பையன் தான்.. சோ சுவீட்பா.. நாங்க லவ் பண்றோம்.. தட் மேட்டராகத்தான் அவன் வீட்டுக்குப் போறேன்.. அங்கே போனதும் கால் பண்றேன்..பை..” என அவள் வைத்ததும், இவர்களுக்கு உலகம் தலைகீழானது.

“என்ன விதமான பெண்ணை பெத்து இருக்கிறோம்? எப்படி இவ்வளவு தூரம் துணிந்து போனாள்? யார்மா அவன்? என்ன நடந்துகிட்டு இருக்கு? அக்ஷ்ரன்.. அவனுக்குத் தெரியுமா?” அவர் பதட்டத்துடன் தனது ஆடைகளை சூட்கேசில் அடுக்கியவாறு கேட்டார். அகல்யா மேலும் பதட்டமாகி,

“என்னங்க நீங்க? என்ன பண்றீங்க?” என பதற, அவரோ,

“இங்கே இருக்க சொல்றியா? இந்தியா போறேன்மா.. எனக்கு சர்வமும் பதறுது..அவளை தனியா தங்க வைக்கவே மனது இல்லாம கிடந்து அல்லாடிக்கிட்டு இருந்தேன்.. இவ இதுவரை போகாத நாட்டுக்கு.. அதுவும் எவனையோ நம்பி.. கடவுளே.. என்னால மூச்சே விடமுடியலை..” தொழிலில் கொடி கட்டி பறக்கும் அந்த ஜாம்பவான், கோழை போல தனது ரத்தத்துக்காக, சாதாரண தந்தை போல மாறிப்போய் தன்னை மறந்தார். அகல்யாவோ கணவரை போகவேண்டாம் என தடுத்து,

“என்னங்க அங்கே தான் உங்க பார்ட்னர் ராம்கோபால் இருக்கார்லே.. அவர்கிட்டே..”  என அகல்யா தொடங்க, அவரோ என்றும் மனைவியை சினந்திராதவர்,

“அகல்யா! என்னைப்போக விடு! அங்கே போயிருப்பது நம்ம அப்பாவி மகள்.. அவளுக்கு என்ன தெரியும்? என் பொண்ணோட விசயத்துக்கு எதுக்கு என் தொழில் முறை நண்பர்களிடம் உதவி?” என அவர் கோபித்தவாறே, கிளம்பியும் விட, அகல்யாவும் “நானும் வருகிறேன்” எனவும் அதுக்கும் அவர் கோபித்துக்கொண்டார்.

“நமக்கு ஒரு பையன் இருக்கான் அகல்யா.. அவன் என்னோட இன்னொரு கண். நீ அவனை பார்த்துகிற பொறுப்பான அம்மாவா இரு! நான் நம்ம பொண்ணை  அழைச்சுட்டு வரேன். அந்தப்பையன் நல்ல பேமிலின்னா, படிப்பு முடிஞ்சதும், மேரேஜ் பண்ணி வைச்சு, இங்கே ஒரு பிசினஸ் பண்ணிகொடுத்திடலாம்” என சமாதானம் மனைவிக்கு செய்வது போல தனக்கும் செய்தார். பின் சென்றும் விட்டார். அகல்யாவோ வேண்டாத தெய்வங்கள் இல்லை என்றானது.

130

அக்ஷ்ரனுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை அழுதவாறே சொல்லவும், அவனோ அதிர்ச்சியை மறைத்து, வரவழைத்த சிரிப்புடன்,

“அம்மா அவ ட்ரிப் போயிருக்கா.. இதுல என்ன பயம்? அவளும் சில விஷயங்களை அறிஞ்சு கத்துகொண்டு வரட்டும். கூலாக இருங்க!” என அவரை அமைதியாக்கியவனால், அமைதியாக இருக்க முடியாது போனது.

தந்தைக்கு அழைப்பை விடுத்து தகவலை அறிந்து கொண்டவன், அடுத்த கணமே உடன்பிறப்புக்கு அழைக்கவும், அவளது மொபைல் அணைப்பில். லொகேஷனும் காட்டிக்கொடுக்கவில்லை. அவனோ முகம் எல்லாம் சூடாக, ஒரு மாதிரியாக ஆரம்பித்தான்.

பிசினஸ் ட்ரெயினிங்கில்  இருக்கவே முடியாது,  அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவனை கட்டிக்கொண்டு அன்னை அழ ஆரம்பிக்கவும், அவனோ தான் கலங்குவதை காட்டிக்கொடுக்காது,

“அம்மா! என்ன இது? அவ ஹாலிடே தானே போயிருக்கா.. கூல்மா!” என அவரை அமைதியாக்கியவன் மனது அடித்துக்கொண்டே இருந்தது.

“இல்லைப்பா.. எனக்கு என்னமோ தப்பாக நடக்க போகிறதுன்னு உள் மனது சொல்லுது” என அவர் கலங்கி தவிக்கவும், அவனுக்கும் அந்த உணர்வு எழாமல் இல்லை. இதுவரை அவளை இப்படி பிரிந்தோ, தூரதேசம், தனியா அனுப்பியோ, பழக்கம் இல்லாதவர்கள். இல்லாதது, பொல்லாதது எல்லாம் நினைத்து கலங்கத்தான் செய்தார்கள். அக்ஷ்ரன் வரவழைத்த சிரிப்புடன், தாய்க்கு எடுத்து சொல்லி,

“அப்பா போயிருக்கார்மா.. அவளுக்கு நெட் இல்லாமல் போயிருக்கும்.. அவ கால் பண்ணுவா.. வீடியோவில் பார்த்து பேசிடலாம்” என சமாதானம் செய்தான்.

அவர் தூங்காது யோசனையாகவே இருந்தார். அவனும் அக்ஷ்யாவின் நண்பர்களுக்கு அழைப்பை விடுத்து, சேகரித்த தகவல்களால் அதிர்ந்தான். அவனை அது நிலைகொள்ளாது தவிக்க வைத்தது.

அன்னையிடம் வாய் திறந்து சொல்லி, அவரை மேலும் கலக்கத்துக்குள்ளாக்க விரும்பாதவன்,  அவன் கூட பாரிசில் ட்ரெயினிங்கில் இருக்கும்     இந்திய நண்பர்களான வினீத், வாசுதேவன், இருவரையும் ஒரு சேர அழைத்து, விஷயம் சொல்லவும், அவர்களும் சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு தகவல் கொடுத்து, அக்ஷ்யாவின் படத்தையும் அனுப்பி, காதும், காதும் வைத்தது போல கண்காணிக்க சொல்லியும் விட, அங்கே ஐபிஎஸ் படித்துக்கொண்டிருக்கும் சரவணன் தலைமையில், அக்ஷ்யாவை தேடி விமான நிலையத்துக்கே வந்து சேர்ந்தது ஒரு குழு.

என்ன பிரயோசனம்? அவர்களுக்கு ஏமாற்றமே. சரவணன் தனது போலீஸ் நண்பர்கள் உதவியுடன் அக்ஷ்யாவினை கண்டுபிடிக்க முனைந்தான். விமான நிலையத்தில் வீடியோ, அவர்கள் சொன்ன வாகனத்தின் இலக்கம், கோகுலவர்தனின் படம் எல்லாம் அனுப்பி, அவன் கேட்டுக்கொண்டது,

“பெரிய பிராப்ளம் ஆக்கவேண்டாம். பெண். என்னோட பிரண்டின் சிஸ்டர் தான். அவள் கூட வந்தவன் தப்பானவன்னு தகவல். பப்ளிக்காக்காது அவளை மீட்டுடணும்” என ஆனால் அக்ஷ்யாவின் விதி  “போங்கடா நீங்க டூ  லேட்” என காறித்துப்பியது.

அக்ஷ்ரன், வினித், வாசுதேவன், சரவணன், ஒரே க்ரூப் அழைப்பிலேயே இடைவிடாது தொடர்பில் இருந்தார்கள்.

அக்ஷ்ரனுக்கு நேரம் கடக்க, கடக்க, தான் இன்னும் எதுக்கு பாரிசில் இருக்கிறேன்? என புரியாது குழம்பியவன், தனது ஆடைகளை அடுக்கவும், அன்னை பதட்டத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவனும் அவரை மீண்டும் சமாதானம் செய்துவிட்டு,

“அம்மா..! நான் அப்பா கூட இருந்தா, அவருக்கு மைண்டால் ஹெல்ப்பா இருக்கும்ன்னு கூப்பிட்டார்மா..” என பொய் சொன்னான். அகல்யாக்கும் கணவர் அருகே மகன் கண்டிப்பாக தேவை தான் என புரியவும், கலக்கத்துடன் ஏற்றுக்கொண்டார்.

“போனதும் அக்ஷ்யா இந்தியா சுத்திப்பார்க்குறதா இருந்தா, நான் கூட இருந்து, சுத்திகாட்டிட்டு, அவ கூட வரேன். இல்லைன்னா அப்பா, அவ, நான், மூணு பேரும் அடுத்த பிளைட்டுல வந்து குதிக்கிறோம். டோன்ட் வொரி”  என அவரை கொஞ்ச, கோகுலவர்தனின் பெயரை மகன் உச்சரிக்காத போதே அந்த புத்திசாலி அன்னைக்கு எதுவோ ஒன்று புரிய ஆரம்பித்தது. அரைமனதாகவே அத்தனை தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு தலையாட்டினார்.

விமானம் ஏறியவன். எத்தனை ஜென்மம் எடுத்தாலும், தன்னை சிலுவையில் அறைய வைக்கப்போகும் நினைவுகளால், சித்திரவதைக்குள்ளாகி, உயிரோடு தினமும் சாக போகிறேன் என அவன் அறிந்திருக்கவில்லை.

131.

இருபத்திநாலு மணித்தியாலத்தில் எவரும் நினைத்துப்பார்க்க முடியாதது எல்லாம் நடந்தேறியே போனது அக்ஷ்ரனின் வாழ்வில். இந்தியா வந்திறங்கியவனை, எதிர்கொண்ட நண்பர்கள் அழைத்துப்போனது நகரத்தில் இருந்து தள்ளி அமைந்து இருக்கும் எவரோ ஒருவரின் பிரமாண்டமான  சொகுசு வீட்டுக்கு.

என்ன? எது? என சொல்லாது அப்படியே அழைத்த நண்பர்களை குடைந்து எடுத்தவன் களைக்க, தந்தை அழைப்பு,

“என்னப்பா நீ வந்திட்டியா? எங்கே என?” அவனும்,

“வந்து கொண்டு இருக்கிறேன். நீங்க எங்கேப்பா?”எனக்கேட்டதும்,

“நான் பிரண்ட் கூட  ஒரு இடத்துக்கு போய் கொண்டிருக்கிறேன். நீ நம்ம சென்னை வீட்டுக்குப் போ!” என்றுவிட்டு வேறு எந்த தகவலும் பகிராது வைத்தார். அவனுக்குள் விபரீதம் என புரிய, சரவணன் சட்டையை எட்டிப்பிடித்தவன்,

“சரவணா என்னாச்சுடா? எங்கேடா கூட்டிப் போறீங்க?” என அவன் கத்தவும், அந்த சொகுசு பங்களா பயமுறுத்தியே அவனை உள்வாங்கிக்கொண்டது.

சரவணனின் இரு போலீஸ் நண்பர்களின் தலைகள்  இவர்களை எதிர்கொள்ளவும், குதித்து இறங்கிய அக்ஷ்ரனை உள்ளே ஓட விடாது சரவணன் தடுக்க, அவனோ திமிறிக்கொண்டு ஓடி வந்தவன், மூர்ச்சையாகி போய், விழுந்து, உருண்டு, வந்து சேர்ந்தது அலங்கோலமாகி, சிதைக்கப்பட்டு இருந்த அக்ஷ்யாவின் உடலருகே. தலையை எவ்வளவுக்கு வேகமாக உதறி, அது கனவா? இல்லை நிஜமான விபரீதமா? என அறிந்து கொள்ளும் தீவிரத்தில் உதறித்தள்ளினான்.

அருகே போதையில், உலகம் மறந்து, உருண்டு கொண்டிருந்தது கோகுலவர்தனுடன் சேர்ந்து ஒன்று அல்ல ஒன்பது இளவட்டங்கள். அழகு பதுமை கிழிந்து போய் இருந்தது. அக்ஷ்ரன் அள்ளி எடுத்து, தனது மடியில் போட்டவன் வெறி வந்தவன் போல தன் முகத்தில் அடித்தான். பார்த்து, பார்த்து, பொத்தி, வளர்த்த உடன்பிறப்பின் உடலெங்கும், அவள் என்னவித கொடூரத்துக்கு ஆளாகி இருப்பாள்? என புரியவும் தாங்க முடியாதவனாக,

“அக்ஷ்யாஆஆஆஆ…” என குரலெடுத்து கத்தினான்.

“அய்யோ அம்மு! என்ன கோலமடி? என்னாலேயே தாங்க முடியலையே.. அம்மா.. அப்பா.. எப்படி..எப்படி தாங்குவாங்க…? அய்யோ! என்ன வந்து உன் கண்ணை மறைச்சதுடி? மை ஏஞ்சல்! மை பிரின்சஸ்! எழுந்திரும்மா! எதுவேணாலும் என்கிட்டே மறைக்க மாட்டியே.. ஏம்மா இத மறைச்சே..? உன்னை இந்தக்கோலத்தில பார்க்கவா நான் வந்தேன்?” கதறிய கதறலில் சரவணன் கண்கள் குளமாக, மடங்கி உட்கார்ந்து நண்பனின் தோளைத் தொட்டான்.

“என்கிட்டே பத்திரமா அழைச்சுட்டு வந்துடுவேன்னு சொன்னியேடா.. இந்தக்கோலத்திலேன்னு சொல்லாம விட்டுட்டியே” என சரவணனைப் பார்த்து  அலறினான்.

“….”

“அய்யோ! எங்கேன்னு போய்  என் மனசை ஆத்துவேன்? என்னோட அம்மு என்ன பாடுபட்டு இருப்பாள்? உன் ஷரன் வந்திடமாட்டானான்னு துடிச்சிருப்பியே? பாவிகளா!!”பல பெண்களின் உடலை சுவை பார்த்த அந்த பங்களா அவனது கதறலை தாங்கமுடியாது மிரண்டது.

“தண்டனை வாங்கிக்கொடுத்திடலாம். பிளான் போட்டு, அவளை ஏமாத்தி, இந்தியா அழைச்சுட்டு வந்திருக்கான்.   ஒரு நாளில நாசமாக்கிட்டாங்கடா.. அவ கூட வந்தவன் ஒரு பணக்கார பையன் ட்ரக்ஸ் அடிக்டிவ் ..அவனோட பிரண்ட்ஸங்க தான் இவங்க எல்லாரும்.. லவ்வுன்ன பேரில பல பொண்ணுங்களை நாசமாக்கிய கூட்டம்டா.. ஏற்கனவே கிரிமினல் லிஸ்டுல இருந்த நாலு பேர் பணத்தால் தப்பிச்சுகிட்டே இருந்தாங்க..  எவ்ளோ தெனாவெட்டா அதே வண்டி நம்பர்ல, அக்ஷ்யாவை ஏர்போட்டிலேருந்து ஏத்திக்கிட்டு, நேரா இங்கே வந்து, மாத்தி, மாத்தி, சிதைச்சதுமில்லாம, சோசல் மீடியாவில் முகம் மறைச்சு, upload பண்ணி, ரசிச்சுகிட்டு இருந்திருக்காங்கடா..” சரவணன் சொல்ல, சொல்ல,

“நோ.!!. என அலறியவன் “யார்ரா? யார்ரா நீங்க எல்லாம்? ஏண்டா? ஏண்டா இந்த வெறி என் அம்மு மேல? அவ குழந்தைடா! அவ மேல நாய்களா? உங்களை..” என அவன் அக்ஷ்யாவின் உடலை தரையில்  விட்டுவிட்டு, ஆவேசமாக எழுந்தான்.

போதையில் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது எனத்தெரியாது மயங்கி உருண்டுகொண்டு இருந்தவர்கள் மீது, கையில் கிடைத்த பாதுபான பாட்டில்களால சரமாரியாக அடித்தான். பின் காலால் அவர்களை உதைத்த உதையில் இந்த ஜென்மமே வேண்டாம் எனும் நிலைக்கு வந்திருந்தார்கள்.

சரவணனும், அவனது நண்பர்களும், அவனைப் பிடித்து இழுக்காது போயிருந்தால் ஒன்பது கொலைகள் நடந்து இருக்கும். தி க்ரேட் அக்ஷ்ரன் வாழ்க்கையே நாசமாகி இருக்கும். அக்ஷ்ரா க்ரூப் அழிந்தே போயிருக்கும்.

“சரவணா! என்னை விடுடா!” என திமிறியவனை அடக்கவே போராடினார்கள் மூவரும்.

“அக்ஷ்ரா! அமைதியாகுடா..நீ கொலைகாரனாகாதே! உன் பேரண்ட்ஸை அனாதையாக்கிடாதே! உன்னோட பாதையை மாத்திடாதே! கூல்! நீ இங்கே இருக்கவேண்டியவன் இல்லைடா! உன்னோட அப்பாவோட கனவை அக்ஷ்யா தான் கலைச்சுட்டா! நீயும்” என அவன் அவசரமாக சொல்ல, அக்ஷ்ரன் மூளையில் “அப்பா” எனும் வார்த்தை விழ ஸ்தம்பித்து நின்றான்.

***

“அ…ப்..பா அ…ப்பா வ…ந்துகிட்டு இருக்கிறது இங்கேயா? நோ.. நோ.. அவ..அவ..ர் பார்க்க கூடாதுடா” என அவன் பதட்டமாக, அவரும் வந்து சேர, சட்டென்று அக்ஷ்ரன் ஓடிப்போய் தந்தையைக் கட்டிக்கொண்டவன்,

“அப்பா…! வேணாம்பா! நீங்க பார்க்க வேணாம்!” எனக் கதற, ஆனந்தகிருஷ்ணாவுக்கும் விபரீதம் புரிய, அவர் அவனது பிடியில் இருந்து திமிறி,

“விடுப்பா! என் கண்மணிக்கு என்ன ஆச்சு?  விடு என்னை!” என கத்தினார். அவனோ விடாது,

“இல்லைப்பா.. அவ இல்லைப்பா.. எங்களை ஏமாத்திட்டு போனவ போனது தான்..” என அவன் தந்தையைக்கட்டிக்கொண்டு கதறத் தொடங்கவும், அடுத்த நொடி அவர் திமிறாது சிலையாகி நின்றார்.

அடுத்தடுத்து காரியங்கள் அதிவேகமாக நடந்தது. இருவருக்கும் எல்லாம் மங்கலாகவே தெரிந்தது.  அகல்யாவுக்கு விபரம் சொல்லாது வரவழைத்தார்கள். அவர் அவர்களிடம் வந்து சேர முதல் அடுத்த இடி அக்ஷ்ரனை தாக்கியது. போஸ்ட் மாட்டம் முடிந்து அக்ஷ்யாவின் உடலை வாங்க தந்தையுடன் காத்திருந்தவனுக்கு, அவரையும் உயிரற்ற உடலாக கரங்களில் வாங்குவேன் என எதிர்பார்த்தானில்லை.

அவனது சுவாசமே நின்று போனது. பிரம்மை பிடித்துப்போய் மாரடைப்பால் தன் மீது சாய்ந்தவாறு மகளிடமே சென்ற அந்த தந்தையை அவன் வைத்த கண் வாங்காது பார்த்தான். அழவேயில்லை. நண்பர்கள் பயந்து, அவனை உலுக்கியும், அவனிடம் வெறித்த பார்வையும், பேச்சும் இல்லை.

132

விமான நிலையத்துக்கு சென்று அகல்யாவை அழைத்துக்கொண்டு வண்டியில் ஏறிய சரவணனை துருவி கேட்டு களைத்தார் அகல்யா. அவனோ,

“அம்மா ப்ளீஸ்மா! நீங்க எல்லாத்துக்கும் தயார் படுத்திக்கோங்க.. உங்க மனசை திடபடுத்திக்கோங்க.” என அவன் சொல்லிவிட்டு இறங்கியது மருத்துவமனையில்.  அகல்யா கண்களை மூடி மனதுக்குள்,

“எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கு தயாராகிக்கொள் மனமே! எதுவாக இருந்தாலும் எனக்கு தாங்கும் சக்தியை தந்துடு! என்னை சரிச்சுடாதே!” என வேண்டிக்கொண்டு, அளவுக்கு மீறி தன் கைவிட்டுப்போன உணர்வுகளை, அடக்க முனைந்தவாறே, உள்ளே நுழைந்தவரை, வரவேற்றது வெறித்தபடி இருந்த மகனின் தோற்றமும், இரு வெள்ளைத்துணிகள் போர்த்தி இருந்த உயிரற்ற உடல்களும்.

அவருக்கும் மயக்கம் வந்து விழுந்துவிடுவார் போல இருந்தது. ராம்கோபால் அக்ஷ்ரன் அருகே இருந்தவர் ஓடி வர முதல், சரவணன் அவரை தாங்கிக்கொண்டு,  அருகே கொண்டு வந்து நிறுத்தினான். கண்ணீர் ஆறாக ஓடவும், நடுங்கும் கரத்தால் தொடப்போனவர், தொடாமலேயே ஆசையாக பெற்ற.  செல்ல மகளில்லாது தான் இல்லை என நிரூபித்து, கூடவே துணைக்குப்போன கணவரை காதலுடன் பார்த்து,

“என் பேச்சு கேட்காமலேயே ரெண்டு பேரும் போயே போயிட்டீங்களா? உங்களுக்கு உங்க பொண்ணு உசத்தியா போயிட்டாள்லே? நான் வேணாம்ன்னு போயிட்டீங்கள்லே?” அவர் கண்ணீர் வழிந்தோட, கணவரின் முகத்தை வருடிவிட்டு, மகளிடம் திரும்பியவர்  தனது பெற்ற வயிற்றில் கரம் வைத்து,

“அக்ஷ்யா!!!” என குரலெடுத்து அவர் அலறிய, அலறலில் அந்த மருத்துவமனை ஆட்டம் கண்டது. அவரை அணைத்து தேற்றியது சரவணனே. அழுது முகம் மாறியவர், களைத்துபோனவராக, அப்பொழுதுதான் மகனிடம் சடாரென திரும்பினார். அவனிடம் எந்த சலனமும் இல்லாது, அவன் இருப்பது உறைக்கவும், அவரோ சட்டென்று கண்களை துடைத்துக்கொண்டு,

“அக்ஷ்ரா!” என அவனை உலுக்கினார். அவனோ பதில் சொல்லாது வெறித்தவாறே இருந்தான்.

அதன் பின் நடந்தவைகள் எதுவுமே அகல்யாவுக்கு தேவையில்லாதது போலானது. மகனை மீட்டெடுத்தாலே போதும் எனும் நிலைக்கு அவர் வந்துவிட்டிருந்தார். மகனை தனது கண்ணுக்குள்ளேயே, கரத்தின் பிடிக்குள்ளேயே வைத்திருந்தார்,

அக்ஷ்ரன் பாரிஸ் திரும்பாது, கேஸ், போலீஸ், என ஒரு வெறிகொண்ட சிங்கம் போல உலாவிக்கொண்டிருப்பதை பார்த்து அகல்யாவுக்கு பயம் அதிகமாகியது. அவன் “ஒரு கரை காணாது இந்தியாவை  விட்டே விலகேன்”. என இரவு பகலாக கொலைவெறியோடு இருந்தான்.

அன்னை எத்தனை மன்றாடியும் அவன் கேட்டான் இல்லை. தூங்காது அவன் இருந்து, அவரது நிம்மதி பறிபோனதும் இல்லாது. அவன் சில நேரங்களில் “அக்ஷ்யா” என கதறுவதும் அவளைக்காப்பாற்ற முடியாது போன இயலாமையில், வீட்டின் பொருட்களை உடைப்பதும், தொடர, டாக்டர்கள் அவனை இந்தியாவை விட்டு அழைத்து போய்விடுமாறு வலியுறுத்தும் அளவுக்கு அவனது நிலை மோசமானது.

அகல்யாவும் கணவர் தன்னிடம் சொல்லிவிட்டுப்போனது “அக்ஷ்ரன் என்னோட கண் அவனைப்பார்த்துக்கொள்” எனும் வாக்கியம் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்க, அவரால இனியும் தான் அமைதியாக இருந்தால், தனது பிள்ளையையும் இழந்து விடுவேன். என புரியவும் அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.

சரவணன் உதவியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க, அவர்கள் பணத்தால் விளையாட, அதைவிட மேலதிகமாக அக்ஷ்ரன் அவனது தந்தையின் நண்பர் ராம்கோபால், அவரது அரசியல் செல்வாக்கால் விளையாடி, ஒன்பது பேரையும் உள்ளுக்குள் தள்ளி, ஜென்மத்துக்கும் வெளியே வராதவாறு அத்தனை கேசுகளையும் அவர்கள் மேலே போட்டு, ஒரு வழி பண்ணிவிட்டார்கள்.

தண்டனை வழங்கியபின் ஒரு நொடியும் தாமதிக்காது, மகனை வற்புறுத்தியே அழைத்துக்கொண்டு போக முனைய, அவன் பிடிவாதம் பிடிக்கவும்,

“கூடவே எனக்கும் கொள்ளி வைச்சுட்டு நீ மிருகமாகவே சுத்து!” என அவர் என்றும் அப்படி பேசி இராதவர், ஆதங்கத்தில் பெற்ற வயிற்றின் துடிப்பில் பேசிவிட, அன்னையின் வார்த்தைக்கு பலமாகவே அவனிடம் பலன் இருக்கவே செய்தது. அடக்கினான். அவருக்கு அடங்கிப்போனான்.

அப்படியே இழுத்துக்கொண்டு பாரிஸ் வந்தவர், மகள் சம்பந்தப்பட்ட எதுவும் இல்லாத வீட்டுக்கு குடி வந்தார். தினமும் போராடி, பக்குவமாக எடுத்து உரைத்து, தனது கைக்குள்ளேயே அவனை வைத்திருந்து, யோகா, பியானோ, வயலின், என தொடங்கி, உலகின் தலை சிறந்த நூல்கள் வரை அவனது பொழுதுபோக்குகளாக்கி அவனை மாற்றினார்.

“உன் அப்பா.. அவரின் உலகத்தின் ஹீரோ.. நீ அவருக்கு பிறந்தவன்.. நீ எத்தனை பேருக்கு ரோல்மாடலாக போறேன்னு முடிவு பண்ணிக்கோ! உன் ஆளுமை, உன் பேச்சு, உன் நடை, உடை, பாவனை, எல்லாம் உனக்கே உனக்கானதாக தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கட்டும். ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல, ஒரு அக்ஷ்ரனாக நீ ஆளணும்! உன் உலகை நீ வடிமைக்கணும்! ..தி க்ரேட் அக்ஷ்ரன் என சொல்ல வைக்கணும்..! உன்னை சுத்தி எப்பொழுதும் நேர்மறை வைப்ரேஷன் இருக்கணும்..! நீ வாயிலிருந்து விடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு மதிப்பு இருக்கணும்..! இந்த உலகம் உன் உலகம்.. அதை ஆளு! அன்பால், அரவணைப்பால், உன் அசாத்திய குணங்களால்.. அடுத்தவர்களின் கிரஷாக இரு!” என தினமும் பேசி, ஊக்கம் கொடுத்து, அவனை அவர் செதுக்கினார் எனலாம். கூடவே ஓர் சத்தியமும் வாங்கிக்கொண்டார்.

“என்றும்  நீ காதலில் வீழவே கூடாது! அம்மா நான் பார்த்து, கால நேரம் வர கட்டிவைப்பேன்” என.

கணவர் ஆசைப்பட்டது போல அவனை உருவாக்கினார். அவனும் அவருக்காக அவரின் மகனாகவே மாறிப்போனான். தான் எதற்காக பிறந்தேன்? தந்தை எதுக்கு சிறுவயதிலே தனக்கு எல்லாம் கற்றுத்தர முனைந்தார்? தான் பயணிக்கவிருக்கும் பாதை   எதுவென? அவனுக்கு தெரிந்ததும், அதை நோக்கியே அவனது எண்ணங்களும், செயல்களும், முயற்சிகளுமானது.

இருவருக்குள்ளும் வடுக்கள் மறையாது இருந்தாலும், ஒருவருக்கு, ஒருவர் துணையாக முடிந்தவரை, நினைவு படுத்தாது வாழப்பழகிக்கொண்டார்கள்.

செரீனா தற்கொலை செய்ய முயன்ற தருணம் அவன் அழைத்துக்கொண்டு போய் அன்னையிடம் தான் அவளை ஒப்படைத்தான். அவரும் தன் மகள் போலவே அவளை அரவணைத்து கவுன்சிலிங் கொடுத்தார். அவளுக்கு மட்டும் தனது மகளின் காதலையும், அதன் விபரீதத்தையும் அவர் சொன்னதும், செரீனாவுக்கு தன் செயல் மீதே  வெட்கம் வந்தது. அவனுக்கு எல்லாப்பெண்களும் அக்ஷ்யாவே. தன்னை சூழ்ந்திருக்கும் எவரையும் துவள விடாது, கரம் கொடுத்து மேலே தூக்கிவிட்டுக்கொண்டே போனான்.

ஜெயிலுக்குள் போனவர்களின் உறவுகளில் சிலர் என்று அக்ஷ்ரன் இந்தியாவில் காலடி வைக்கிறானோ? அன்று அவனது உயிரை வாங்க காத்துக்கொண்டிருப்பதை அறிந்த  சரவணன். அகல்யாவிடம் சொல்லி, அவனை இந்தியாவுக்கு  எந்தக்காலத்திலும் வரவிடாது பார்த்துக்கொள்ள சொன்னான்.

ஆனால் விதி சஸ்விஹா மூலம் அவனை இழுத்துக்கொண்டு வந்தே சேர்த்தது. அவன் வருகிறான் என்றதுமே, சரவணன் செய்த முதல் வேலை, ராம்கோபாலின் உதவியுடன், அரசியல் ரவுடிகளை ஏற்பாடு செய்து, அக்ஷ்ரனை எவரும் நெருங்காது பார்த்துகொண்டான். கூடவே தனது செல்வாக்கால் மப்டி போலீஸ் எந்நேரமும் அவனை பாதுகாத்துக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டான். அதன் பின்னரே சரவணன் கொடுத்த தைரியத்தில், அகல்யா பாரிஸில் தாக்குப்பிடித்தார்.  இது எதுவும் அறியாதவன் அவனின் தேவதை கூட  அவன் உலகத்தில்.

133

அகல்யா, பிரசன்னா கூடவே  வந்திறங்கியதுமே கல்யாண வேலைகள் அதிவேகமாகவே நடந்தன. விநாயகமூர்த்திக்கும், வைதேகிக்கும் அகல்யாவைப்பார்த்ததும் தம் மகள் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என எண்ணி ஆனந்தக்கண்ணீர் விடாத குறை.

அகல்யா வந்ததிலிருந்து சஸ்விஹாவை தன் கூடவே வைத்துக்கொண்டார். அவளும் உரிமையுடன் அவரின் தோளைக் கட்டிக்கொண்டு, அக்ஷ்ரன் கூட பேசாது, அவனை கடுப்பேற்றிக்கொண்டிருந்தாள். அவனோ ஒரு நாள் பொறுத்துப்பார்த்தான். அடுத்த நாள்,

“மேடம் மேரேஜ் ஆகட்டும் அப்புறம் இந்த அக்ஷ்ரன் யாருன்னு காட்டுறேன்” என மெசேஜ் போட்டுவிட்டு, அவன் பிரசன்னா கூட கல்யாண வேலைகளில் கவனம் செலுத்தலானான்.

ஆடம்பரமாக செய்ய யாருமே விரும்பவில்லை. குறிப்பாக அகல்யா மறுத்தே விட்டார். இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகளுக்குள்ளும், அக்ஷ்ரனின் தொழில் வழி, முக்கிய விஐபிக்களுக்கும், நண்பர்களுக்கும் மட்டுமே அழைப்பு. அடுத்த முகூர்த்தத்திலேயே அமைதியாக, அதே நேரம் எல்லாம் அசத்தலாக நடந்தேறியது.

மீனாட்சியுடன் சத்யனைத்தவிர மற்றவர்கள் வந்திருந்தார்கள். அக்ஷ்ரன் தாயிடம் முன்கூட்டியே எல்லாம்  சொல்லிவிட்டிருந்தான். அகல்யா அவர்களை இன்முகத்தோடு வரவேற்றவர், சகஜமாகவே பேசிக்கொள்ளவும், அவர்களுக்கு வியப்புதான். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? என.

மணவிழா நேரலையாகவே அவனது கிளை நிறுவனங்களில் ஒளிபரப்பப்பட்டது. சாகரும், செபஸ்டியானும் விசிலடித்தார்கள்.    பெண்கள் குழு வீடியோ அழைப்பில் சஸ்விஹாவை ஒரு வழி பண்ணிவிட்டார்கள்.

“நம்ம பாஸை கடைசியில நாம சைட் அடிக்க உன்கிட்டே பர்மிஷன் கேட்கிற நிலைக்கு வந்துட்டோமே” என பமீலா போலியாக அழுது அலுத்தாள்.

“சஸ்வி! பாஸ் உன்னைப்பத்தி அடிக்கடி என்கிட்டே விசாரிக்கும் போதே எனக்கு ஆச்சர்யமா இருக்கும். நம்ம பாஸ் ஒரு பொண்ணை பத்தியான்னு? ஆனா  அவரை நீ ஒரு வழி பண்ணிட்டுத்தான் இந்தியா போயிருக்கே” என செரீனா சொல்லவும், புது தாலி தந்த முகத்தின் சிவப்பு மேலும் கூடிப்போனது  சஸ்விஹாவுக்கு.

“இனிமேல் பாஸை நாம லவ் பண்ணவும் முடியாது.. சைட் அடிக்கவும் முடியாதுப்பா” என பமீலா, லில்லி இருவரும் சோக ராகம் பாடவும், சஸ்விஹா அவர்களைப் பார்த்து,

“டீசண்டான   அன்புப்பா உங்க அன்பு. அதுக்கு நான் என்னிக்கும் தடை இல்லை” என சொன்னதும், மற்றவர்கள் அவளை நட்புடன் பார்த்து,

“உனக்கு இந்த பொஸஸிவ்னஸ் எல்லாம் கிடையாதா?” என கோரஸாக கேட்டார்கள். அவளோ புன்னகைத்து,

“நிறைய இருக்கு.. ஆனா அதன் எல்லை எதுவரை போகணும்ன்னு தெரிஞ்சு வைச்சிருக்கேன்” என்றாள். அதன் பின் தோழிகள் அவள் வருவது, வேலையில் சேருவாளா? தங்களுக்கு எம்டியாகி விரட்டுவாளா? எனும் பேச்சுக்கு மாறினார்கள். அவளும் பல காலத்துக்கு பின் தோழிகளின் அரட்டையிலும், கிண்டல் கேலிப்பேச்சுகளிலும் தன்னை மறந்து பேசிகொண்டிருந்தாள்.

எல்லாம் ஓய்வுக்கு வந்தது. அக்ஷ்ரன் அன்றே லண்டன் பயணமாகும் பிரசன்னா கூட, சில முக்கிய விடயங்களையும்  பேசிவிட்டு,  மற்றைய நண்பர்களையும் வழியனுப்பிவிட்டு வந்து சேர்ந்தான்.

அக்ஷ்ய இல்லத்திலேயே தம்பதிகளுக்கு அடுத்த சடங்குகள் என பெரியவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். வைதேகியின் காதில் விநாயகமூர்த்தி ஏதோ சொன்னதும், அவரும்,

“நான் பேசிட்டு வரேன்.. இருங்க” என்று கணவருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிவிட்டு, வித்யா கூட தன்னை மறந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மகளை பூரிப்போடு பார்த்து, நெட்டி முறித்தவாறு அறைக்குள் நுழைந்தார்.

“எம்பெருமானே இப்படி ஒரு கோலத்தைத்தான் நான் கனவு கண்டேன். நன்றிப்பா”  என மேலே பார்த்து சொன்னவர், மகளிடம்,

“சஸ்வி! அடுத்து என்ன நடக்கபோகுதுன்னு நான் சொல்லத்தேவையில்ல.” என அவர் ஆரம்பிக்க, அவள் முகம் வெட்கம் பூசியது. அதை மறைக்க சிரமப்பட்டாள்.

“ரொம்ப போராடாதே! எனக்கு வயிறு குளிரோ, குளிருன்னு குளிருது” என மகளின் முகத்தை வருடி சொன்னவர்,

“நீ போட்டு வைச்சு இருக்கியே உருப்படாத பிளான்.. அதை உடைப்பில போட்டுவிட்டு, மாப்பிள கூட சந்தோஷமா இரு! எங்களுக்கு உன்னைப்பார்த்து போரடிச்சுப் போச்சு! சீக்கிரம் ஒரு பேரனோ, பேத்தியோ வரட்டும்! அதுங்க கூட விளையாட காத்திட்டு இருக்கோம்” என அவர் சொல்லிவிட்டு, அவ்வளவுதான் என திரும்பிப் போக, அவளோ பாதி  வெட்கம், மீதி  திகைத்து,

“அம்மா!” என அதட்டியே கூப்பிட்டாள். அவரோ,

“நீ என்ன சொன்னாலும் என் காதுல ஏறாது. போ! போ! மாப்பிளை உன்னை மறந்துட்டு பிளைட் ஏறிடப் போறார்” என ஏத்திவிட்டே போனார். வித்யா அடக்கமாட்டாது சிரித்தாள். மற்றவள் முறைக்கவும்,

“அம்மா சொல்றது கரெக்ட்டு தான். நீ லேட்டாக்க, அக்ஷ்ரன் தனக்கு மேரேஜ் ஆகலைன்னு நினைச்சு, உன்னை மறந்து பிளைட் ஏறினாலும் ஆச்சர்யம் இல்லை”.

“சும்மா இருடி” சஸ்விஹா அவளை அடிக்க வர,

“நாலு நாளா நீ அவரை கடுப்பேத்திக்கிட்டிருக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைக்காதே” என சொன்னாள்.

“…”

“சஸ்வி ப்ளீஸ் நீதானே சொல்வே ரசிச்சு, அனுபவிச்சு, வாழணும்ன்னு.. வேஷ்டாக்காது வாழேன்! உன் வாழ்க்கை இப்போ உன் கையில பத்திரமா இருக்கு” என அக்கறையுடன் சொன்னாள்.

“ஸ்ப்பா! சொர்க்கத்துக்கு போன என் பாட்டி திரும்பி வந்து என்னை டார்ச்சர் பண்றது  போல இருக்குடி” என அவளை முறைக்க, அகல்யா வரவும், இருவரும் எழுந்து பணிவுடன் அவரை பார்த்தார்கள்.

“எல்லாம் நல்லபடியாகவே முடிஞ்சுடுத்து. அதிகாலை எழுந்திருச்சு இது வரை தாக்கு பிடிச்சதுக்கு பாராட்டணும்.. எந்த சம்பிரதாயத்துக்கும் உன் விருப்பமில்லாது நானோ, என் பையனோ, வற்புறுத்த மாட்டோம். ப்ரீயா  இரு..உன் ப்ரீடம் உனக்கு. தூங்கணும்ன்னா போடா! ரொம்ப களைச்சு இருப்பே” என அவளின் நெற்றியில் முத்தமிட்டு அவர் சென்றுவிட, வித்யா தோழியைக்காட்டிக்கொண்டு,

“தி க்ரேட் அக்ஷ்ரனின் அம்மான்னு ப்ரூவ் பண்ணிட்டாங்க.. மாமியார் அசத்தலடி! சஸ்வி எனக்கு விசிலடிக்கணும் போல இருக்கு” என குதூகலித்தாள்.

“உன் பாஸ்கரை கட்டிக்கிட்டு வா! நானும் விசிலடிக்கணும்”  என்றாள்  இவள். மற்றவள் திகைக்க,

“என்ன எனக்கு எப்படி தெரியும்ன்னா பார்க்குறியா?”

“… ”

“அக்ஷ்ரனோட பிராஞ்சு பேங்க் உன் பாஸ்கர் பேங்க்ல தான்.. எனக்கு இன்னிக்கு தான் தெரிய வந்துச்சு..”

“ஓ!” என்றவாறு தோழியை சங்கடத்துடன் பார்த்தாள்.

“என்னை அழுத்தம்ன்னு சர்டிபிகேட் பண்ணிட்டு.. நீ அழுத்தத்துக்கு ஆஸ்கர் அவார்டு வாங்கிட்டே!” என காதைப் பிடிக்க முனைய, மற்றவள் பிடிபடாது ஓடிப்போனாள். சஸ்விஹா பின்னாலேயே  வரவும், பெற்றோர்கள் அவளை அதிர்வுடன் பார்த்து,

“ஏம்மா நீ இன்னுமா மாப்பிளை அறைக்குள்ளே போகல?” என ஒரு சேர கேட்க, அவள் முகம் சிவக்க, வித்யா பழிப்புக்காட்ட, ஒன்றும் சொல்லாது அகல்யாவை சங்கடத்துடன் பார்த்துவிட்டு, மெல்ல நகர்ந்தாள்.

“இந்த வீட்டுல எங்கே, எந்த அறையில உனக்கு போய் தூங்கணும்ன்னு தோணுதோ? அங்கே போய்க்கோம்மா” என்றார். மற்றவர்கள் அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க,

“என் மருமகளை ப்ரீயாக இருங்க விடுங்க..” என அவர்களைப் பார்த்து அன்புடன் சொல்லிவிட்டு, சங்கடத்துடன் தயங்கியவாறே  நின்றவளிடம்.

“நீ போம்மா”  என்றார்.

“அகல்யாம்மா ..இன்னிக்கு நல்ல நாள் அதுவுமா.. அவ” என தயக்கத்துடன் வைதேகி ஆரம்பிக்க, அவரோ கண்களால் ஜாடை காட்டி,

“நாம நல்லதே நினைச்சா.. எல்லா நாளும் நல்ல நாள் தான் வைதேகிம்மா” என்றார்.

சஸ்விஹா இதுக்கு மேல் அவர்கள் முன் நின்று, தனக்கு மேலும் சங்கடத்தை கூட்ட விரும்பாதவளாக, அலங்கரிக்கப்பட்ட அறைக்குள்  நுழைந்து, கதவை சாத்தியும் கொண்டாள்.

134

சாத்திவிட்டு திரும்பியவள் திடுக்கிட்டாள். வேட்டி, சட்டையோ,  சோபாவில் ’ஏண்டா எங்களை பிடிக்கலையா?’ என அழுதவாறு இருக்க, அக்ஷ்ரன் கையில்லாத, வெள்ளை நிற பனியனும்,  அரைக்கால் short உடன் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தான்.

“அடப்பாவி..எப்படிடா இப்படி தூங்கி வைச்சே? நான் எத்தனை பேச ஒத்திகை பார்த்து வந்தேன்னு தெரிஞ்சுக்காம..” என வாய்விட்டே செல்லமாக திட்டியவள், கட்டிலில் வந்தமர்ந்தாள். பின் சில நொடிகள் அவன் தூங்கும் அழகை ரசித்தாள்.

“தூங்குற உன் ஸ்டைலை பார்த்தாலே எனக்குள்  கண்டபாட்டுக்கு கவிதை கொட்டுதுடா!” என சொல்லி புன்னகைத்தவள், மெல்ல குனிந்து, அவன் நெற்றியில் இதழ் ஒற்ற, அவ்வளவு தான், அடுத்த நொடி அக்ஷ்ரனின் பிடிக்குள் சிறைப்பட்டுப்போனாள்.

“அட கள்ளனே! தூங்குறது போல நடிப்பா?” என அவள் அவனது பிடியிலிருந்து திமிறப்பார்க்க, அவன் விட்டால் அல்லவா?

“இங்கே ஒருத்தன் உருண்டுகிட்டு இருப்பான்னு உனக்கு உறைக்கலையோ? தாலாட்டு பாடி தூங்க வைக்கலாம்ன்னு ஆடி அசைந்தா வர்றே?” என  செல்லமாக முறைத்துக் கேட்டவன் உதடுகள், அவளது உடலில் ஊர்கோலம் போக ஆரம்பித்தது. சஸ்விஹாவோ,

“ஷரா!” என நெளிந்து, கிறங்கி, பின்

“நா…ன். நான்.. பேசணும்” என அவள் அவனை மேலும் முன்னேற விடாது, தடுக்கவும்,

“பேபி! நீ பேசு.. அது உன் வேலை..  நான் என் வேலையைப் பார்க்கிறேன்” என அவன் அவளை சிவக்க வைக்கவும், அவளோ, கண்களை மூடி தனது உணர்வுகளை அடக்கிவிட்டு,

“ஷரா!  எனக்கு வேண்டாம்” என்றாள் சட்டென்று. அவள் மீது இதழினால் வயலின் மீட்டிக்கொண்டு இருந்தவன்,   அவளிடமிருந்து விலகிய வேகத்தில் சஸ்விஹா அதிர்ந்து தான் போனாள்.

தான் பேசுவதை அவனைக்கேட்க வைக்க வேண்டும் என்ற உந்துதலில், அவள் அந்த வார்த்தையை முன், பின் யோசிக்காது, சொல்லிவிட, அவன் முகம் மாறிய வேகமும், அவன் விலகிய லாவகமும் பின்புதான் அவளுக்கு உறைத்தது.

“விஹா இந்த வீட்டில அறைகளுக்கு பஞ்சமில்லை. குட் நைட்!” என்று விட்டு அவன் எட்டு வைத்து கதவை நோக்கிப் போகவும், சஸ்விஹா கலைந்த புடவையை, அள்ளி சுத்திக்கொண்டு,

“ஷரா!” என ஓடி வந்து அவனது கரம் பிடித்து நிறுத்தவும், அவன் மறு கரத்தால் அவள் பிடித்த பிடியை, விலக்கிவிட்டு, கதவை திறக்க முற்பட, அவள் குறுக்காக வந்து நின்று கொண்டு கண்களால் கெஞ்சினாள்.

அவனோ உணர்ச்சிகள் அற்ற பார்வையால் அவளைப்பார்க்க, முதல் முறையாக அப்படியான ஒரு பார்வையை அவனிடத்தில் கண்டவள் துடித்துத்தான் போனாள்.

“கடவுளே! நான் உங்ககிட்டே பேசணுமன்னுற ஒரே நோக்கத்தில் அந்த வார்த்தையை  சொல்லிட்டேன்பா.. ப்ளீஸ்.. இந்த பார்வை பார்க்குற புருஷனை என்னால தாங்க முடியாது” என அவள் கண்கள் கலங்க சொல்லவும், அவன் எதுவும் பேசாது அமைதியாக அவளைப்பார்த்தான். அவளோ அவனது அமைதி தன்னை கொல்வதை உணர்ந்து,

“டேய்!“ என எட்டி அவனது சட்டையை பிடித்தவள்,

“என்ன உனக்கு நான் வேணும் அவ்வளவு தானே? வா!” என இழுக்கவும், தன்னை அவள் எந்த ரகத்துக்குள் வீழ்த்திவிட்டாள் என அறிந்ததும், முகம் சிவக்க அவன் குரல்,

“சஸ்விஹா!” என அதட்டலாக வந்தது. அவளோ சிறிதும் அசராது,

“நீ என் புருஷன்! உன்கிட்டே நான் எப்படியும் பேசுவேன்.. எல்லாத்தையும் கொட்டுவேன்.. தாங்குற சக்தியை இப்போதிலிருந்து வளர்த்துக்கோ!” என சொன்னவளின் குரலிலும் விழிகளிலும், நின்ற தோரணையிலும், அவனை அடைந்த திமிர், அப்பட்டமாக தெரிந்தது. அதை ரசித்தவன் மனதுக்குள்  ‘ராட்சஸி’ என சொல்லி முகத்தினை இளக்காது வைத்திருந்தான்.

“எனக்கு மட்டும் நீ வேண்டாமா? வேணும்டா! ஆனா.. ஆனா.. இப்போ..” என அவள் திக்க, அவன் தலையாட்டிவிட்டு, திரும்பிப் போய் கட்டிலின் முன் இருந்த சோபாவில் அமர்ந்தான். அவளும் அவனருகே அமர முற்பட,

“பக்கத்தில் உட்கார்ந்தா.. எழுந்து போய்விடுவேன்”   என்றது அவனது குரல். அவளோ  திடுக்கிட்டு,

“ஓஹோ.. பாஸ் அவ்ளோ கோபத்தின் உச்சியில் இருக்கீங்களோ?” அவள் அரைகுறையாக சுத்திய புடவையோடு, இடுப்பில் கை வைத்து, முறைத்த முறைப்பில், இவனது உணர்வுகள் அறுப்பேன் என்றது. கண்களை மூடி அதை அப்படியே எழுந்திருக்க விடாது அடக்கினான். அவளோ,

“நீ என்னடா உட்கார வேண்டாம்ன்னு சொல்றது? நான் உட்காருவேன்.. தில்  இருந்தா எங்கே அடக்கிட்டு இரு பார்க்கலாம்” என திமிறாகவே சொல்லிவிட்டு, அவனை ஒட்டியே அமர்ந்தும் கொண்டாள். அவனோ ஆசையாக, ரசித்து, ரசித்து காதல் செய்பவள் அசத்தும்  நட்சத்திரமாக எதிரே இருந்து கொண்டு அவனை  இம்சித்துக்கொண்டிருக்க, அவனுக்குள்  கிளர்ந்தெழும்  உணர்வுகளை அடக்க சிரமப்பட்டவனாக  தலையை தாங்கியவனாக,

“என்னதான்மா உன் பிரச்சனை?” என்றான் நொந்து போய். அவன் அப்படி கேட்டதும், அவள் அவனை காதலுடன் பார்க்க,

“விஹா! என் நிலை புரியாம  நீ விளையாடிட்டு இருக்கே. நாலு நாளா என்கிட்டே ஒரு பேச்சு வார்த்தை இல்லை.  நான் தவிச்சுக்கிட்டு இருந்தேன்.. மேரேஜ் ஆனதும் சகஜமாக மாறிடுவேன்னு பார்த்தா.. நீ நடந்துக்கிறதும், பேசுறதும், எனக்கு சுத்தமா புரியல.. இன்னும் என்ன தான் உன் பிராப்ளம்? வாயை திறந்து சொல்லேன்.. என்னால் முடிஞ்சா நான் சொலுஷன் சொல்லமாட்டேனா?” என அவன் ஆதங்கத்துடன் கேட்டதும், அவள் அவனது கரத்தைப்பற்றி பேச ஆரம்பிக்க,

“ஹேய்! என்னை டச் பண்ணாம பேசு!” என்றான் அவன் கரத்தை உருவியவாறு, அவளோ புரிந்து போனவளாக,

“ஷரா ..நான் உங்க மேல எவ்ளோ காதல் வைச்சு இருக்கேன்னு தெரியும்ல?”

“அதை அளக்குறதுக்கு எனக்கு பொறுமை இப்போ சுத்தமாக இல்லை. நான் அளக்க நினைச்சது என்னமோ, இப்போ அடக்கிட்டு நிக்குறேன்.. நீ சொல்லும்மா” என்றான் அவன் கிண்டலுடன், அவளோ முறைத்தவாறே,

“அதே போல என பேரண்ட்ஸ் மேலயும் அளவு கடந்த பாசம் வைச்சு இருக்கேன்..”

“அதான் தெரிஞ்ச விசயமாச்சே.. புதுசா பேசும்மா” என்றான் அவன் மேலும் கிண்டலுடன்.

“இருப்பா!” என அவனை அதட்டிவிட்டு, தொடர்ந்தாள்.

“என்னால் உங்களை எப்படி இழக்க முடியாதோ, பிரிய முடியாதோ, அதே போல தான் அவங்களையும்” என்றுவிட்டு அவனைப்பார்த்தாள். அவனுக்கு புரிந்து போக, ஒரு சிரிப்பு சிரித்தான். அதைப்பார்த்தவள்,

“என்ன இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தமோ?” என கேட்டாள்.

“அர்த்தம் சொன்னா உனக்கு வருத்தம் வரும்.. நீ மேலே சொல்லு!”

“நான் முதல்லே உங்க காதலை ஏத்துக்காததுக்கு என் பேரண்ட்ஸ பிரிய கூடாது என்ற ஒரு காரணமும். ஆனா நான் ஏத்துக்காமல் போனதும், நீங்க வேறு யாருக்கும் தாலி கட்டி மனைவியாக்கிக்கிட்டா.?. அதையும் என்னால் ஏத்துக்க முடியாது போகும். அதனால..” என அவள் தொடர,

“அதனால எனக்கு டைம் செட் பண்ணி.. வாடான்னு டார்ச்சர் பண்ணி.. வரவழைச்சு, நீதான் என் முதல் காதல்! நீ தான் என் முதல் ஆண்ன்னு டயலாக் விட்டு.. இப்போ நீ தான் என் முதல் கணவன்! ஆனா உனக்கு நான் இணையேன்னு பர்ஸ்ட் நைட்டுல எனக்கு பாடம் நடத்துறே.. ஏம்மா என்னைப்பார்த்தா உனக்கும் பாரிஸ் லூசாத் தான் தோணுதா?” அவன் குரல் மாற்றத்துடன் கேட்டான். அவளோ திகைத்து,

“ஷரா! நா..ன்.. எ..ன்ன சொல்ல..” என திக்கியவாறு, அவனோ,

“நீ என்ன சொல்ல வர்றேன்னு சொல்லட்டா” என அவன் கேட்கவும், அவள் கலங்க ஆரம்பித்த கண்களுடன் தலையாட்டினாள்.

“உனக்கும், எனக்கும் மேரேஜ் ஆகிடுத்துடா.. இனி நீ வேற எந்த பொண்ணோட கழுத்துலேயும் தாலி கட்ட முடியாது.. மேரேஜ்  மட்டும் பண்ணவே கூப்பிட்டேன்.. அது அமோகமாக நடந்துடுத்து.. இனி நீ கிளம்பி பாரிஸ் பாதாளத்துக்கே ஓடிடு! நான் இங்கே என் பேரன்ட்ஸ் கூட ஒதுங்கிடுறேன். என்னால அவங்களை விட்டு வந்து உன் கூட ஈபிள் டவர்ல ஈ கூட விரட்ட முடியாது..நீ ரொம்ப..ரொம்ப புரிந்துணர்வானவன். என்னை புரிஞ்சுப்பே.. அதான் இப்படியொரு மெகா புத்திசாலித்தனமான பிளான் போட்டு, உன்னை கட்டிகிட்டேன். கிளம்பு, கிளம்பு, காத்து வரட்டும்ன்னு சொல்லப் போறே சரிதானா? இல்லை ஏதாச்சும் மறந்துட்டேனா?” என அவன் பட படவென அவளின் மனதைப் படித்தவன் போல பேசவும், அவளோ விறைத்து, எழுந்து கொண்டு,

“எ..ப்..படி?’ என திக்கினாள்.

“ம்.. உங்களுக்கு  தாலி காட்டியது அக்ஷ்ரன்-ஆனந்தகிருஷ்ணா மேடம். முன்னுக்கு பின் முரணாகுறது தான் உங்களுக்கு கை மீறிய கலையாச்சே”  அவனது ஸ்டைலில் தலை சாய்த்து விரல்களால் அவளது முகத்தை ஜூம் செய்தவாறு சொன்னான்.

“…”

“நல்லா பிளான் போட்டுத்தான் என்னை வீழ்த்தி இருக்கீங்க.. ஆமா இந்தக்கொடுமையான தண்டனை தருவதற்காக அவ்ளோ லவ்ஸு என் மேல?” என அவன் வியந்து, நடித்து, நாடியில் கை வைத்தான்.

***

அவனை யாருக்கும் விட்டுக்கொடுக்காது, கல்யாணம் செய்து கொண்டதை நினைத்து பூரித்திருந்தவள், தனது செயலை, அவன் தவறாக புரிந்து கொண்டுள்ளான் எனும் ஆதங்கம் ஒரு புறம், இயலாமை மறுபுறம், என்ன வழி?  எனும் கலக்கம் இன்னொரு புறம்,  எல்லாம் ஒன்று சேர்ந்து அவளை ஆக்கிரமிக்க,  முகத்தை மூடிக்கொண்டு குலுங்கத் தொடங்கினாள்.     அவனோ,

“விஹா!” என எட்டு வைத்து வந்தவன், அவளைத் தொடாமலேயே, “அப்போ அது தான் உண்மையா?” என அவன் அதிர்வுடன் கேட்டான். அவள் அழுதவாறே மெல்ல தலையாட்டினாள்.

“அடடா! நேத்து காதலை சொல்லி, இன்னிக்கு கல்யாணம் பண்ணி, நாளைக்கு டைவோர்ஸா? ஏம்மா கின்னஸுக்கு பெயரை கொடுத்திட்டியா என்ன?” என அவன் அப்பொழுதும் கிண்டலுடன் கேட்க, அவள் விம்மலுடன்,

“ஷரா! என்னோட நிலையில இருந்து பேச மறந்துட்டீங்களே.. நீங்க நான் காதலிச்ச அக்ஷ்ரன் இல்லை.. அக்மார்க் கணவன்னு ப்ரூவ் பண்றீங்க” என குற்றம் சுமத்தவும்,

“பார்றா! மேடத்தோட கொழுப்பான ஸ்டோரியை. ஏம்மா உனக்கே இது நியாயமா தெரியுதா? என்னைப்பார்த்தா உனக்கு பாவமா இல்லையா?” கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு செல்ல முறைப்புடன் கேட்டான்.

“…”

“அப்பா, அம்மா கூட இருக்கணும்ன்னு நினைக்கிறே.. வெரிகுட்! அப்போ நாம அப்பா, அம்மா ஆகவேண்டாமா? எனக்கொரு ஜூனியர் சஸ்விஹா, உனக்கு ஒரு பிரின்ஸ் அக்ஷ்ரன் வேண்டவே வேண்டாமா?” என அவன் குறும்புடன் கேட்க, அவளோ அழுகையை நிறுத்தி,

“நீங்க என்னை வார்த்தைகளால் பலவீனமாக்க பார்க்காதீங்க” என முறைத்தாள்.

“சரி உன் வழிக்கே வரேனே.. இப்போ நான் என்ன பண்ணனும்? நான் என்ன செய்தால் இந்த முகம் அழாது இருக்கும்? என்கிட்டே இருந்து என்ன எதிர்பார்க்குறே? சொல்லு! தலை தாழ்த்தி செய்துட்டு, திரும்பியும் பாராது, பாரிஸ் பறந்துடுறேன்” என்றான் அவன் இப்பொழுது அவளது வழிக்கே வந்து.

அவன் அப்படி நேராகவே கேட்டதும் சஸ்விஹா அதிர்ந்தாள் தான். ‘அவனே கேட்டுவிட்டான். எங்கே சொல்லு! உனக்கு என்ன வேணும் என்பதை’ மனது இடிக்கவும், அவள் அமைதியாக யோசித்தாள்.

“நீ ஒத்தைக்கால்லே நின்னு என்னை வரவழைச்சு கல்யாணம் பண்ணதை வைச்சு, நான் ஓராயிரம் ஆசைகளை வளர்த்துக்கிட்டேன். அது எல்லாம் ஸ்னோ போல கரைஞ்சுடுத்து. இப்போ உன் முன் நிற்பது உன் முன்னாள் முதலாளின்னு நினச்சுக்கோ! அவன்கிட்டே உன் பிரச்சனையை சொல்லி தீர்வு காண்பே அல்லவா? அதே போல இப்பொழுதும் காணலாம்..”

அவன் அப்படி சொன்னதும் சஸ்விஹாவுக்குள் ஏகத்துக்கும் தயக்கம். முதலாளியாக இருந்தால் முன், பின் யோசிக்காது பேசி இருப்பாள். ஆனா அவள் முன் இருப்பதோ, அவளின் காற்று அல்லவா? எங்கே தென்றலாக வீசும் அந்தக்காற்று, சூறாவளியாக திரும்பிவிடுமோ? எனப் பயந்தாள்.

“சொல்லுங்க மேடம்” என்றுவிட்டு அவன் சோபாவில் போய் அமர்ந்து கொண்டு அவளது வாய் திறப்பிற்காக காத்திருந்தான்.

135

சஸ்விஹா எத்தனை ஒத்திகை பார்த்திருப்பாள். அத்தனையும் அவனது வார்த்தைகளின் முன் வந்து விழுந்தால் தானே. அவனுக்கோ, அவளைப்பார்க்க பார்க்க, காதல் பெருக்கெடுத்து ஓடி வழிந்தது. மனமோ  ‘போடா! போய் இழுத்து உன் மார்பில் போடு!’ அவள் வாய் திறப்பாள் என சொன்னது. அவனோ அதை அடக்கிவிட்டு,

“மேடம் எனக்கு தூக்கம் வருது. நீங்க நான் என்ன செய்யணும்ன்னு சொன்னீங்கன்னா.. அடுத்த பிளைட் நாளைக்கு ஈவ்னிங் இருக்கு.. விர்ருன்னு போய், சர்ருன்னு பறந்துடுவேன்” என்றான் நேரத்தையும், அவளையும் பார்த்து. அவளோ ஒரே முடிவாக கண்களை மூடிக்கொண்டு,

“முதல்லே அதை செய்ங்க” என்றாள். அவன் திகைக்காது, விழிகளால் அவளை ஊடுருவிப்பார்த்தான்.

“என்ன? என்ன பார்வை வேண்டி கிடக்கு?! அதான் சொல்லிட்டேனே..” கோபமாக அவள் கேட்கவும், தன் மீது அவள் காட்டும் அந்த கோபத்தையும் ரசித்தவாறு,

“எதையாம்?” என்றான் வேண்டுமென்றே மேலும்  கோபமேற்றி.

“என்னால என் பேரண்ட்ஸ அனாதையாக விட்டுட்டு உங்க கூட வர முடியாது” அவள் சொல்ல தொடங்கவும், அவனோ ஏதோ கதை கேட்பவன்  போல வலது கரத்தை, short பாக்கெட்டில் விட்டு, இடது கரத்தால் நெஞ்சில் கை வைத்து,

“ஓஹோ..”என அதிர்ந்தவன் போல நடித்தான்.  அதைக்கண்டவள்,

“ஷரா! நான் சீரியஸா பேசுறேன்” என அதட்டினாள்.

“அய்யயோ..நீ பேசும்மா! சின்சியரா ரொமான்ஸ் பண்ண வேண்டிய பர்ஸ்ட் நைட்டுல, சீரியஸா நீ பேசுறத கேட்டு, நான் சீரியஸாகாம இருக்கேனே.. அதுக்கு நீ சீரியஸாக ஒரு கிஸ்ஸாவது லஞ்சம் தரணும்” என அவன் சொல்லவும், அவள் பொறுமை குறைய,

“டேய்!” என்றாள். அவன் அசராது இரு கைகளையும், பாக்கெட்டில் வைத்து,

“நீ தான் வரமாட்டேன்னுட்டே.. ஆனா ஸ்லீப்பிங் ஏஞ்சல் வரட்டுமான்னு கேட்குறா.. சோ டெல் மீ எக்ஸ்பிரஸில” என்றான். அவளோ தலையில் கை வைத்து, தொப்பென்று கட்டிலில் அமர்ந்து பின் ஒரு மூச்சு விட்டு, சொல்லிவிட்டாள்.

“மீறி வந்தாலும், என்னால நிம்மதியா சந்தோஷமா வாழ முடியாது. உங்களுக்கும் சந்தோஷத்தை தராது, நானும் சந்தோஷமா இராது, என் பேரண்ட்ஸ வயசான காலத்துல, நான் அருகே இல்லாம, நோ.. வேண்டாம்.. எல்லா பக்கமும் எனக்கு இடி தான்.. ஒரு பக்கமே இடி போதும்! நீங்க கிளம்புங்க” என்றாள் தீர்க்கமாக. அவனோ,

“ம்..சுயநலமில்லாத பெண்ணுன்னு நினைச்சு காதலிச்சேன்.. ஆனா சுத்தமான அக்மார்க் ஒன் சைட் சுயநலவாதிம்மா நீ !” அதே நிலையில் நின்று குனிந்து சொல்லவும், அந்த ஆடையில் அவனது ஆண்மையையும், ஸ்டைலையும் பார்த்தவளோ,

‘கடவுளே நான் கல்யாணமே பண்ணி இருக்க கூடாதோ?’ என நொந்து, தன்னையும் மீறி தவிக்கும் உணர்வுகளை அடக்கப்பார்த்தாள்.

“அது எப்படி? நான்  வேறு  யார் கழுத்திலேயும் தாலி கட்டக் கூடாது.. அது மட்டும் உனக்கு வேணும்.. உன் கழுத்துல தாலி கட்டியாச்சு. இனி நான் போயிடணும்..”அவன் யோசனையுடன் கேட்கவும், அவள் பதில் சொல்லாது பார்க்கவும், அவனோ உதட்டைகுவித்து முத்தம் அனுப்ப,  அவளோ அதை கரத்தால் விரட்டி விட்டவாறு முறைத்தவண்ணமே பார்த்தாள்.

“போயிட்டாப் போச்சு.. எனக்கு எதுக்கு இன்னொரு தாலி? அது கட்ட ஒரு பெண்ணோட  கழுத்து? உன் கழுத்து.. உன் தாலி.. வைச்சுக்கோ!” என்றான் வரவழைத்த திமிருடன்.

“உலகத்தின் ஒட்டுமொத்த திமிருக்கு விருது வாங்கியவனை கல்யாணம் பண்ண என்னை சொல்லணும்” என்றாள். அவனை ரசிக்கும் தனது மனதினை திட்டி. அவன் மந்தகாச புன்னகையுடன் தொடர்ந்தான்.

“நான் வைச்சுக்குறேன்.. பாரீஸுல கேர்ள்ஸுக்கா பஞ்சம்? நேரத்துக்கு ஒண்ணுன்னு கணக்கு பார்த்தா.. ஸ்ஸ்ஸ்..பாடியில என்னமோ பாஸ்ட்டாக பரவுது..” என சொல்லிவிட்டு அவன் கதவை திறக்க நகரவும், சஸ்விஹா, சட்டென்று எழுந்து நழுவிய முந்தானையை தூக்கி வீசிய லாவகம் பார்த்தவன் கரங்கள் கதவை திறப்பதை விடுத்து, அவளை இழுத்து அணைக்க முனைய, பட்டென்று பின்னுக்கு கட்டிக்கொண்டான். அவனது சட்டையை பற்றியவள்,

“என்ன? என்னை கடுப்பாக்குறியா?” என உலுக்கினாள்.

“நோ.. நோ.. மேடம் கையை எடுங்க.. இல்லைன்னா கேஸ் போட்டுடுவேன்..”என அவன் குரல் மாற சொல்ல, அவள் அதிர்ந்து,

“ஷரா!” என திக்கினாள்.

“அதான் போன்னு சைன் வைக்காத டைவோர்ஸ் தந்துட்டீங்களே.. அப்புறம் நான் எவ கூட எப்படி இருந்தா உங்களுக்கு என்ன? கேட்குற உரிமையை சற்றுமுன் இழந்து போனதை மறந்துட வேண்டாம்” என சொன்னவன், அவளைத்தொடாமலேயே, பின்னுக்கு எட்டு வைத்து அவளின் பிடியிலிருந்து, தன்னை விடுவித்த லாவகம்,  சஸ்விஹாவை  அதிர்ந்தே சிலையாக வைத்தது. அவளுக்கான தென்றல் காற்று தாறுமாறாக, அவளுக்கே திருப்பி வீச ஆரம்பிப்பதை உணர்ந்து கொண்டாள்.

‘நீ  எப்படியெல்லாம் பக்குவமாக பேசவேண்டும்? என ஒத்திகை பார்த்து வைச்சிருந்தே.  ஆனால் இப்பொழுது பேசி வைத்த தோரணையும், அக்ஷ்ரனின் ரியாக்ஷனும் எதிர்பார்க்கலையேடி’ மனது சாடியது.

அக்ஷ்ரன் கேசத்தை கோதியவாறு, கதவைத் திறக்க கரம் நீட்டிவிட்டு, நின்று திரும்பி மனைவியைப் பார்த்தான். அவளோ கட்டிலில் சிலையாகி சமைந்து அமர்ந்திருந்தாள்.  அவளது கோலம் அவனது மனதை பிசையவே செய்தது.

அவளுடன் வீம்புக்கு மட்டுமே வார்த்தைகளினை தொடுத்தானே தவிர, அவனது உள்ளத்தில் இருந்து அல்ல. அவளின் திட்டத்தை வித்யா  அவனிடம் பட்டும் படாமல் சொல்லிவிட்டு இருந்தாள். அவனுக்கு தெரிந்தது போலவோ,  தான் சொன்னது போலவோ, காட்டிக்கொள்ளவும் வேண்டாம் என்றுவிட்டாள்.

தன்னிடம் வேலை செய்யும் காலத்தில் பிரச்சனையை சொல்லி தீர்வு கேட்பவள், அவன் சொல்லும்  பிரகாரமே நடப்பவள், இன்று மனைவியானதும் மார்க்கமாகவே மாறி இருக்கிறாளோ? என அவனுக்கு சந்தேகம் எட்டிப்பார்க்காமல் இல்லை.

முதலிரவில் மனைவி கூட மனது விட்டு பேசி, அவளுக்கு வழி சொல்லலாம் என காத்திருந்தவனுக்கு, அவளோ,  தனது திட்டத்தை சொல்ல முதல்,  அவனை  தொடுவதற்கு அனுமதிக்காது, முகத்தில் அடித்தது போல,

“எனக்கு வேண்டாம்” என்றதும்,  அவன் எதிர்பாராத,  அவனால் தாங்க முடியாத அதிர்ச்சியானது. அதன் விளைவாகவே அவன் விலகி நின்றான். அவனிடம் கலந்து ஆலோசிக்காது, அவளே முடிவு எடுத்துவிட்டு, அவனை போ! என்றால் அவன் அக்ஷ்ரன் இல்லையே.

‘இரு உன் வழியிலே உனக்கு புரிய வைக்கிறேன்’ என மனதுக்குள் கணக்கு போட்டுவிட்டுத்தான் அவளுடன் பேச்சில் ஈடுபட்டான். அவனால் அவனை ஆட்டுவிப்பவளை விட்டு போக முடியவில்லை.

***

திரும்பி நடந்து வந்தவன், மண்டியிட்டு முழங்காலில் அவள் முன் அமர்ந்தான். அவள் திடுக்கிட்டு,

“ஷரா!” என அதட்ட, அவன் கை உயர்த்தி தடுத்துவிட்டு,

“விஹா..உன் மனசை தொட்டு சொல்லு நம்ம லைப்பை ஸ்பாயில் பண்ற இப்படியான ஒரு பிளான் போட எப்படி மனசு வந்திச்சு?” அவன் வேதனை கலந்த குரலில் கேட்கவும், அவளோ விழி நீரை துடைக்காது,

“எனக்கு வேற வழி தெரியலைங்க” என்றாள் உதட்டைக் கடித்து விம்மலை அடக்கி.

“என்கிட்டே வேலை செய்த சஸ்விஹா முகம் கலங்கக்கூடாதுன்னு நினைத்த அக்ஷ்ரன், இப்போ என் மனைவி சஸ்விஹாவை கலங்க விடுவானா அவளோட கணவன்? உன்னோட எல்லா பிராப்ளத்துக்கும் சொலுஷன் தந்தவன், இது ஒரு சின்ன விஷயம் இதுக்கு தரமாட்டேனா?”அவன் கவலையாக  கேட்டான்.

“ஷரா!”எச்சில் விழுங்கினாள்.

“என்கிட்டே பேசாம நாலு நாள் என்னை கொன்னுட்டு இருந்தே. இப்போ காலம் பூரா என்னை சாகடிக்க எப்படி மனசு வந்திச்சு?” வேதனையுடன் கேட்டான்.

“என் மனச சாகடிச்சுதான்”  விரக்தியாக வந்தது அவளின் குரல்.

“அப்போ உனக்கு நான் அவ்ளோதானா?” அதைக்கேட்கும் முன்  அவன் குரல் உடைய, சட்டென்று தலையை குனிந்து அடக்கினான். அவளோ பதறிப்போனவள், அவனது தலையை நிமிர்த்தி, தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டவள்,

“இல்லைங்க.. என்னால் மட்டும் எப்படி இருக்க முடியும்ன்னு நினைச்சீங்க? நான் இந்த முடிவுக்கு வர எவ்வளவு பாடு பட்டிருப்பேன்?”விம்மலுடன் கேட்டாள்.

“அதுதான்மா எனக்கு ஆல்ப்ஸ் மலை சைசு கேள்வியா இருக்கு” என்றான் அவன் தலை தூக்கி அவளைப்பார்த்து.

“உங்களை போன்னு விரட்டுற பாவியாகத்தான் உங்க கண்ணுக்கு தெரியும்.. என்னையும் கொன்று, என் உணர்வுகளையும் கொன்று தான் அப்படி சொன்னேன்” என அவள் அவனது நெற்றியில் இதழ் பதித்து சொல்லவும், அவனோ,

“நீ என்கிட்டே பேசி இருக்கலாம்.. அதை விட்டு என் முகத்தில அடிச்சது போல, நான் தொட வர, நீ” என சொல்லி, இடை நிறுத்திவிட்டு அவளைப்பார்க்கவும், அவள் அவனது முகத்தின் மீது தன் முகம் வைத்து கண்ணீர் விட்டவள்,

“தப்பு தான்! தவறான வார்த்தை தான். நான் சொல்ல வருவதை நீங்க எங்கே கேட்காமல், என்னை.. நான்.. உங்க கூட.. எனக்கு..” அவள் திணற, அவன் மேலும் திணற விடாது,

“நீ அப்படி சொன்னதும் ஒரு வகையில் நல்லது தான்” என்றான். அவள் வியந்து பார்க்க,

“போன்னு சொல்ற முடிவில் இருக்கும் உன்னுடன்,  நான் முதலிரவு கொண்டாடினா.. பாதிப்பு பல மடங்கு..நல்லவேளை”  என சொல்ல, அவளோ குற்ற உணர்வுடன் அமைதி காத்தாள்.

136

“உன்னோட பேரன்ட்ஸ் எங்க கூட பாரிஸ் வரலாம். அங்கேயே தங்கிக்கலாம். அவங்களுக்கு விருப்பம் இருந்தா. அவங்க privacy முக்கியம் இல்லையா?”அவன் தனது தீர்வை சொல்ல ஆரம்பிக்க, அவள் திகைத்துப்பார்த்தாள்.

“இங்கே இந்த வீடு காலம் பூரா சும்மாதான் இருக்கு. அவங்க வந்து தங்கிக்கட்டும். வீட்டுக்கும் ஒளி வந்தது போல இருக்கும். அவங்களுக்கும் தனியாக இருக்குற உணர்வு வராது. இங்கேயே சகல வசதியும் இருக்கு. நித்தமும் பெரிய திரையில உன்கூட பேசலாம்.. பார்க்கலாம்.. பக்கத்துல இருக்குற போல பீல் பண்ணுவாங்க”

“…”

“சம்மர் நேரம் பாரிசில் உன்கூட இருக்கலாம். வின்டர் நேரம் இங்கே வந்து இருக்கட்டும். வின்டர் ஒத்து வந்தா அங்கேயே தங்கிடலாம். எதுவென்றாலும், எனக்கோ, என் அம்மாவுக்கோ, ஆட்சேபனை இல்லை. ஆனா உன் பேரன்ட்ஸ் விருப்பம் முக்கியம்..” அவன் அதை மீண்டும் வலியுறுத்த அவளும் யோசித்தாள் தான்.

“எதையோ நினைச்சு, எதுவோ செய்யப்போக, எதுவோ ஒண்ணு ஆகிட கூடாது.”

“….”

“நீ அக்ஷ்ரன் க்ருப் பார்ட்னராயிட்டே. சோ உனக்குன்னு ஒரு பதவி, நீ அதுக்கான  சம்பளம்,  எல்லாம் உண்டு. அதை உன்னோட பேரண்ட்ஸுக்கு அனுப்புறதும், உன் செலவுக்கு  வைச்சுக்கிறதும் உன் விருப்பம். உன்னோட தேவைகளை பார்த்து, பார்த்து செய்ய இந்த அக்ஷ்ரன்  இருக்கான். இருந்தாலும்  உனக்குன்னு ஒரு பேங்க் அக்கவுண்டு, சேமிப்பு, நீ வைச்சுக்கோம்மா. உன் privacyயில்,  அன்றும், இன்றும், என்றும், நான் மூக்கை நீட்டமாட்டேன்” அவன் சொல்லிக்கொண்டு போகப்போக, சஸ்விஹா நெஞ்சம் அவன் மீதான காதலை நிறைத்து, சரித்து, விழிகளில் வழியவே விட்டது.

“நீ சொன்னது போல உன்னை இங்கேயே விட்டுட்டு, நான் போனா  நீ மேரேஜ்  ஆகியும், என் கூட வாழாது, பெத்தவங்களுக்கு மகளாகவே அவங்க கூட இருந்தா, அது என்ன வித பாதிப்பை அவங்களுக்கு கொடுக்கும்ன்னு கோல்டு மெடலிஸ்ட்டான உனக்கு ஏன் புரியாம போச்சு?”அவன் கிண்டலாக கேட்கவும்,

“ஷரா” என குற்ற உணர்வுடன் அழைத்தாள்.

“ஏம்மா படிச்சு பட்டம் பெற்று தானே, அத வாங்கினே?” என அவன் சந்தடி சாக்கில் கேட்டும் விட, இவள் முறைத்தாள்.

“சரி ..எல்லோரும் உன்னைப்போல நினைச்சு இருந்தாங்கன்னா யாருமே பாரினர்ஸ் மேரேஜ் பண்ணி இருக்க மாட்டாங்க.. அப்புறம் பாரீன்ஸ் கியூட் பாய்ஸ் நாம என்னாகுறது? எல்லா தேவதைகளும் தேவையில்லாத பயத்துல இந்தியாவிலேயே இருந்துட்டா..” என அவன் சோகமாக சொன்னான். அவள் மெல்ல இதழ் விரித்து,

“மாறுதலுக்கு பாரின் கியூட் பாய்ஸ இந்தியாவில சிறை வைச்சுட்டா போச்சு” என்றாள். அவனோ மறுப்பாக தலையாட்டி,

“எனக்கும் ஒரு அம்மா இருக்காங்க விஹா!” என்றான். அன்னையிடம் அவன் ‘இந்தியாவில் செட்டில் ஆகப்போகிறேன்’ என சொன்னால் என்னாகுவார் என நன்றாக தெரிந்தவன்.

“உங்களை நான் இங்கேயே இருங்கன்னு எந்தக்காலத்திலும் கேட்கமாட்டேன்” என்றாள் ஒரு நடுக்கத்துடன். அதை உணர்ந்தவன், எழுந்து கொண்டான்.

“நீ உன் பேரண்ட்ஸ்கிட்டே பேசினாலும் சரி, நான் பேசினாலும் சரி, முடிவு உன்னிடம். அவங்க இங்கே தான் இருக்கப்போறோம் மாப்பிளன்னு சொன்னால் நீயும் இருந்துக்கோ!”

“…”

“என்னைக்காதலிப்பாயோ? என யோசிச்சேன். கல்யாணமே பண்ணிகிட்டே. இது போதும்! எனக்கு உன் நிம்மதி, உன் சதோஷம், அது தான் முக்கியம்.”

“…”

“இனி எந்த காலத்துக்கும் இந்த  முகம் கலங்கவும் கூடாது. பிரச்சனைன்னு கோடுகள் வரையவும் கூடாது. நம்ம கம்பெனி எம்டியாக இருந்துக்கோ. இந்த வீடு உன் வீடு, நிம்மதியா உன் விருப்பம் போல, ப்ரீயா, சுதந்திரமா வாழ்ந்துக்கோ. அப்பப்போ முடிஞ்சா வீடியோ காலில வந்து தரிசனம் தந்துக்கோ! எனக்கு அது போதும்” என முடித்தவன்,

“இந்த அக்ஷ்ரனை கட்டிக்கிட்டு நீ கலங்கி இருக்கிறது இதுவே கடைசி. குட் நைட்! நிம்மதியா தூங்கும்மா! நான் பக்கத்து ரூம்ல தூங்கிக்குறேன்” என அவன் எட்டு வைக்க, சஸ்விஹா அவனது கரத்தை எட்டிப்பற்றி நிறுத்தி,

“ஷரா இங்கேயே தூங்கலாம்” என்றாள் அவனை ஒரு பார்வை பார்த்து. அவன் மறுப்பாக தலையசைத்து,

“எனக்கு உன் பெண்மையின் போதை தெரியாமலேயே இருக்கட்டும்” என்றவன், அவளிடம் இருந்து கரத்தை பிரித்து விட்டு, விலக, அவளோ ஒரு இழுவையில் அவனை இழுத்து தன் மீது போட்டுகொண்டு பின்னால் கட்டிலில் விழுந்தாள். அக்ஷ்ரன் திகைத்து,

“ஹேய்!”  என அதட்டியவாறு எழ முயற்சிக்க,  அவளோ அவனது கழுத்தில் மாலையாக கரங்களைப்போட்டு, தன் முகத்தோடு அவன் முகத்தினை உரச, அறுபட்டுப் போக அரை நொடியே இருக்கிறது என உணர்வுகள் அவனுக்குள் அலாரம்  அடிக்கவும்,

“விஹா விளையாடாதே!” என மேலும் அதட்ட,

“தெரியுதுல்லே நான் விளையாடுறேன்னு.. வேடிக்கை மட்டும் பாருடா” என அவனை அதட்டிவிட்டு, அவள் அவனது கன்னத்தில் ஒரு இதழ் பதிவு, காது மடலில் ஒரு பதிவு, மூக்கு நுனியில் ஒன்று, கண்களில் இரண்டு, என கொடுக்க, அவன் திணறி, அவளிடமிருந்து விலக முனைய, அவளோ மேலும் அவனது முகத்தினை தன் பக்கம்  இழுத்து,

“எப்படி இருக்கு?” என கேட்டாள். அவனுக்கு மனைவியின் செயலால் உணர்வுகள் ‘எங்களால் முடியாது நாங்கள் விடுதலை பெறப் போகிறோம்’ என்றது

“கொழுப்பு நல்லாத்தான் வேலை செய்யுது” என சொன்னான். அவளோ,

“கொழுப்புன்னு சொல்ற இந்த  உதடு என்னைப்பார்த்து வாயேன்! வந்து என்னை  கொஞ்சேன்னு கூப்பிடுது” என சொல்லியவாறு, அவனின் இதழ் அருகே, தன் இதழை நெருக்கமாக கொண்டு வந்து, அவனை விழிகள் தூக்கி பார்த்தாள். அவனோ,

“அடிப்பாவி! என்னால முடியல! என்னை நல்லா வைச்சு செய்யுறே..இன்னும் என்ன தான் வைச்சுருக்கே?.” என அவன் கிறங்கி, மனைவியை தாபத்துடன் பார்க்கவும், அவளோ,

நிறைவேறாத ஆசைகளில், 

ஒன்றையாவது நிறைவேற்றும் கருணையை 

மறந்த கடவுளை சபித்தவள்,

சலனமின்றி சாளரத்தில் சாமரம் வீசும் 

உன் காதலைப் பார்த்த பின்,

சண்டாளா! 

இப்படியா ஒட்டுமொத்த 

நிறைவேறாத ஆசைகளை, 

ஓரிடத்தில் மனு இட்டு, 

என்னை மண்டியிட வைத்து, 

நிறைவேற்றம் செய்வாய் ?

என கடவுளை மீண்டும் சபிக்கவும்,

கண்ணில் நிறைந்தவனை, 

கண்களால் பிரதியெடுக்க,   

உயிர் பெறுகிறது என் ஜென்மம்!

என சொல்லவும் அக்ஷ்ரன் அடியோடு சரணடைந்தான்.

“என்னை கொல்வதற்கு உன்னைப்படைச்ச அந்தக்கடவுளை, இப்போ நான் சபிக்கப்போகிறேன்” என்றாவாறு அவளின் இதழ், தன் இதழை மூடாதா? என ஏக்கத்துடன் பார்க்கவும், அவளோ அழுத்தத்துக்கு விருது பெற்றவள், அத்தனை இலகுவில் அவனிடம் சரணடைந்துவிடாது,

“இன்னிக்கு இவ்ளோதான் எழுந்திரு!” என்றாள் வேண்டும் என்றே அவனை அலற வைக்கும் நோக்குடன். அவனோ,

“அய்யய்யோ என்னால முடியாதும்மா! ப்ளீஸ்.. வாயேன்” என கெஞ்சினான். அவளோ குறும்புடன் மறுப்பாக தலையசைக்க, அவனோ

“உன் பாஸ் பாவம்ல” என கெஞ்சலை தொடர்ந்தான்.

“ம்ஹூம்” என்றாள் புன்னகையை இதழில் மடித்து,

“ப்ளீஸ்மா..உன் அக்ஷ்ரனை தவிக்க விடலாமா?” என கேட்டவாறு அவள் இதழ் மூட முனையவும், அவள் தலையை இடது, வலதாக, அசைத்து மறுக்கவும்,

“பேபி! தி க்ரேட் அக்ஷ்ரனை கெஞ்ச வைக்குறியே நியாயமா? ப்ளீஸ்.. ப்ளீஸ்..வாம்மா” என கெஞ்சியவாறே அவளது இதழோடு, தன் இதழை பொருத்தினான். அவள் தடுக்காது, அவனின் வயலின் மீட்டலுக்கு இசைந்து கொள்ள ஆரம்பித்தாள்.

காற்று வரும் ஜன்னலில் ஓர் காதல் வருமா ? என ஏங்கியவளை, காலத்துக்கும் காதல் பிடிக்குள் சிறைவைத்துப்போன அவளது தென்றல் காற்று, ஆசையுடன் அவளைத் தழுவியது. கனவில் படைத்தவன், கணவனாகி அவளை திணற வைத்துக்கொண்டிருக்க, சஸ்விஹா தன்னை மறக்க ஆரம்பித்தாள். மூச்சு முட்ட காதலிக்க ஒருத்தனை படைத்து இருக்கக்கூடாதா? என ஏங்கித்தவித்தவளை, ஏகத்துக்கும் ஆட்கொண்டு, அவளின் ஏக்கங்களையெல்லாம் விரட்டிக்கொண்டிருந்தான் அவன்.

இருவரும் சுற்றும் பூமிக்கு களைத்துத் திரும்ப சாளரத்தில், காற்றுடன் கண்டு கழித்த சஸ்விஹாவின் விதி வாழ்த்தி விடைபெற்றது.

***

“விஹா!” என மெல்ல கண்கள் மூடி தன் கைகளின் மீது படுத்திருந்த மனைவியின் காதில் கிசுகிசுத்தான். அவளோ “ம்” கொட்டியவாறு கண்களை திறக்க மனமில்லாது, அவனை இன்னும் இறுக்கிக்கொண்டு, சல்லாபித்த உலகத்திலேயே  இருந்தாள்.

“இவ்வளவு ஆசைகளை அடக்கி வைச்சுகிட்டா நேரத்தை வீணாக்கிட்டு இருந்தே?” என காதலுடன் கேட்கவும், அவளோ, விழிகள் மூடிய நிலையில்,

“அப்போ இருந்த தெளிவில்லாத குழப்ப மனநிலையில, எனக்கு உங்க கூட இணைய சம்மதம் இல்லை” என்றாள்.

“ஏம்மா நாலு நாள் என்கூட பேசாம இதே மனநிலையில் உழன்று கொண்டு இருந்திருக்கியா? அப்பவே என்கிட்டே பேசி இருந்தா, இத்தனைக்கும் எத்தனை ரவுண்ட்ஸ் ஆடி இருக்கலாம்?” என்றான் சோகமாக. அவள் சட்டென்று கண் விழித்து, அவனது நெஞ்சில் குத்தி,

“சீ மோசம்டா நீ!” என செல்லமாக முறைக்க, அவனோ,

“விஹா நான் ரெடி! அங்கே எப்படி?”  என அவன் மீண்டும் கிறங்கிப்போய் கேட்க, அவளோ சிவந்திருந்த முகம், மேலும் சிவக்க முடியாது திணறி,

“ஷரா” என சிணுங்க,

“என்ன வேணாமா? தூங்கலாம்ன்னு சொல்றியா?” என மனைவியின் நெற்றியின் முடிக்கற்றைகளை ஒதுக்கி, ஏசியிலும் வேர்த்திருந்த முகத்தை துடைத்தவாறு,  அக்கறையுடன் கேட்டான்.

“டேய் பொண்ணுங்க சிணுங்கினா அதுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும். அதுல ஒண்ணு வாடான்னு கூட இருக்கும்” என்றதும்,

“இந்த பொண்ணுங்க பாஷை, பார்வை புரிஞ்ச எவனையும் இன்னும் கடவுள் படைக்கலைம்மா” என்றான் சோகமாக.

“அவர் படைக்கிறது இருக்கட்டும். வா நாம படைக்கலாம்” என கணவனைக் கட்டிக்கொள்ள, அவனும் வாய்விட்டு சிரித்தவாறே இசைந்தான்.

137

அடுத்த நாள் விடிந்ததும் முதல் வேலையாக பெற்றவர்களிடம் போய் நின்றாள். விநாயகமூர்த்தி வைதேகியைப்பார்த்து, கண்ஜாடையில் ஏதோ சொல்ல, அவரும் அவ்வாறே பதில் சொல்லிவிட்டு, மகளைப் பார்த்தார்.  அவள் அக்ஷ்ரன் பேசியதை சொன்னதும், அவர்கள் அதை அலச முதல், வைதேகி மகளின் கரத்தை பிடித்து இழுத்துக்கொண்டு, அடுத்த அறைக்குள் நுழைந்தார்.

“அம்மா! என்னம்மா?” என கேட்டவாறு, அவள் புரியாது அவரின் இழுப்புக்கு பின்னால் போனாள். அறைக்குள் வந்தவர், அதை சாத்திவிட்டு, மகளின் முகத்தை உற்றுப்பார்த்தார். பின் முகம் மலர,

“சரி வா போலாம்!” என்றார். அவளோ, குழம்பி,

“என்னம்மா?” என கடுப்படித்தாள்.

“ம்..நீ நைட்டு முழுக்க மாப்பிளைக்கு மூளை சலவையை  பண்ணிக்கிட்டு இருந்திட்டியோன்னு பயந்துட்டேன்” தாய் சொன்னதும், சஸ்விஹா முகம் சிவந்து போனது. வைதேகி எட்டி திருஷ்டி கழித்தவர்,

“அம்மாடி! நீ மாப்பிளையை ஏமாத்தலை தானே?” என கேட்டும் வைக்க,

“அச்சோ! அம்மா உன் மாப்பிளையை ஏமாத்த மறு ஜென்மம் எடுக்கணும்.. அகல்யாம்மா போல என்னை ப்ரீயா விட்டுடேன்”  என அவள் கெஞ்சவும்,

“அவங்க தங்கமான  மாமியாரா போயிட்டாங்க.. மாப்பிளையோ சூது, வாது தெரியாத அப்பாவி.. நீ ரெண்டு பேரையும் ஏமாத்திட கூடாதுன்னுறது தான் என் கவலை”

“யாரு அவங்களை? நான்? என்ன உன் மாப்பிளை அப்பாவியா..? சுத்தம்.” என நெற்றியில் அடித்து விட்டு, அவள் கதவைத்திருந்தாள்.

அக்ஷ்ரனும்,  அகல்யாவும் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் இருவரும் விரைந்து அங்கே வந்து சேர, விநாயகமூர்த்தி மகளைப் பார்த்து.

“சஸ்வி! இப்போ பாரிஸ்ல குளிர் நேரம்..எங்களுக்கு உன்னை பார்க்கணும்ன்னு தோணினா,  விடியோவில் பார்க்கலாம். குளிர் முடிஞ்சா நாங்க அங்கே வந்து உங்க கூட இருக்கோம்.”அவர் சொன்னதும் சஸ்விஹா அக்ஷ்ரனை பார்த்து நன்றி சொல்லி, காதல் கணை வீசினாள்.

“எங்களை அழைச்சுட்டு வர்றது, போறது எல்லாம் மாப்பிளை பார்த்துப்பார். நீ அதை நினைச்சு கலங்காதே!”

“அப்படி அழைச்சுட்டு வர, போக, நீயும் கூடவே வந்துக்கோ! உனக்கு பீலிங்ஸ் இருக்காது” என சேர்த்துக்கொண்டான் அவளின் முகபாவங்களை படித்த அவளின் கணவன்.

“இந்த வீட்டில முதல்லே நாங்க தங்க விரும்பலை.. ஆனா எங்க கூட வித்யாவும் தங்குறதா இருக்கு.. அதனால அவ இருக்குற வீடு, நாங்க இருக்குற வீடு.. ரெண்டையும் காலி பண்ணிட்டு.. இங்கே வந்துடுறதாக இருக்கோம்”

“அப்பா!” அவள் ஆச்சர்யமாக பார்க்க,

“ஆமாம்மா..மாப்பிளை வித்யா கூட பேசினார். அவளும் எந்த தயக்கமும் இல்லாம, என்னோட தோழி, உங்க கூட சந்தோஷமா வாழணும். அதுக்கு என்னால முடிஞ்சது எல்லாம் செய்ய கடமைப்பட்டு இருக்கேன்னு சொல்லிட்டா” அவர் சொல்ல,

அவளுக்கு வித்யாவை கட்டிக்கொண்டு அழவேண்டும் என்ற உந்துதல். அதைவிட அவள் கணவன் எப்பொழுது இதெல்லாம் பேசி இருப்பான்? பட, படவென பனிமூட்டம் விலக வழி காட்டிவிட்டானே.  என எண்ணி வியந்து நின்றாள்.

“நாங்களும் தனியா இல்லை. வித்யாவும் தனியா இல்லை. உன் இடத்துல இருந்து அவ பார்த்துப்பா.. அவ மாசா, மாசம் இங்கே தங்குற ரெண்ட் காசு தருவேன்னு சொல்லிட்டா.. எனக்கும் அது நியாயமா தோணிச்சு.. மாப்பிளையும், சம்பந்தியம்மாவும், உங்க விருப்பம்ன்னுட்டாங்க”

“..”

”அதனால நீ குழம்பி, கலங்கி, சந்தோஷத்தை இழக்காது, மாப்பிளை கூட அடுத்த பிளைட்டில கிளம்பி போயிடலாம்”. என முடித்தார்.

அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பெற்றவர்களை தனித்து விட யோசித்தவளுக்கு, தோழியே தன் இடத்துக்கு வந்து தாங்கிக்கொள்வாள் என எதிர்பார்க்கவில்லை. அதே நேரம், குளிர் காலநிலைக்குள் இப்பொழுது தான் ஆபரேஷன் முடித்த தந்தையை அந்த நாட்டுக்கு அழைத்துபோவதும் உகந்த எண்ணம் இல்லை. அவர் சொல்வது போல இன்னும் நான்கு மாதங்களில் குளிர் மாறிவிடும். அதன் பின் அவர்கள் வந்து தாங்கிக்கொள்ளலாம் தான். மனதுக்குள் சிந்தனை வசப்பட்டு இருந்தவளை அக்ஷ்ரன் குரல் கலைத்தது,

“விஹா உனக்குப் கஷ்டமாக இருந்தா, நீ அவங்க கூட இருந்துட்டு.. சம்மருக்கே வா” என்றான் அவன். பெற்றவர்கள் திகைத்து,

“மாப்பிளை! அவ உங்க கூட இப்பவே வர்றா” என விநாயகமூர்த்தி சொல்லவும், அவன் நம்பிக்கை இல்லாது அவளைப்பார்த்தான். அவளோ,

“ஒரு நாளிலியே ஆசை போயிடுத்தோ?” என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டாள். அவனோ,

“அடிப்பாவி! உன்னோட சைலண்ட் மோட்’க்கு அர்த்தம் நீ வரத் தயங்கி,  யோசிக்குறியோன்னு நினைச்சு சொன்னா.. என்ன கேள்வி கேட்குறே? இடம் சரியில்லாம இருக்கே.. இல்லைன்னா உன்னை.. ” என அவன் பற்களுக்கிடையில் பேசி முறைத்தான்.  அவளோ மெல்ல பழிப்புக்காட்டிவிட்டு, பெற்றவர்களிடம்,

“சம்மதம்” என தலையாட்டவும், அவர்களுக்கு ´அப்பாடா’ என பெரும் நிம்மதி பரவியது. அகல்யா இப்பொழுது வாய் திறந்தார்.

“இப்படியொரு பொண்ணை பெத்ததுக்கு  நீங்க கொடுத்து வைச்சதை விட, மருமகளாக அடைய  நான் ரொம்ப கொடுத்து வைச்சிருக்கேன். அதை விட என் பையன் ரொம்ப, ரொம்பவே புண்ணியம் பண்ணி இருக்கான் சஸ்விஹாவை மனைவியாக அடையுறதுக்கு.” என அவர் விழி நீரை சுண்டவும், அக்ஷ்ரன் அன்னையின் கரங்களை எடுத்து,

“ம்மா! உங்க வேண்டுதல், என்னோட காத்திருப்பு, அப்பாவின் ஆசி, அக்ஷ்யாவின் ஆத்மா.. எல்லாம் தான் சஸ்விஹாவை என்கிட்டே கொண்டு வந்து சேர்த்து இருக்கு” என அவன் மனைவியை கண்கள் நிறைத்த காதலுடன் பார்த்தவாறு சொல்லிக்கொள்ள, அவளுக்கும் கண்கள் அவன் மீதுள்ள காதலை கசியவே விட்டது.

***

அடுத்த விமானத்தில் சஸ்விஹா தனது கணவனுடன் பயணமானாள். வேலைக்காக என்றோ ஒருநாள் விரும்பாத விலங்குடன் விமானம் ஏறிய போது இருந்த மனநிலை என்ன? இன்று  விமானத்தின் ஹனிமூன் கேபினுக்குள் ஜன்னலோரம், அவள் விரும்பி  வீழ்ந்து போன பந்தத்தின் தோளில் சாய்ந்தவாறு, அவளின் வாழ்க்கைக்கான அத்தியாயத்தை முழுமை பெறவைத்த திமிருடன் அமர்ந்திருந்தாள். அகல்யா அடுத்த  கேபினுக்குள் நிம்மதியாக நாவல் படித்துக்கொண்டிருந்தார்.

மனைவி அமைதியாகவே இருப்பதை பார்த்து காதினுள்,

“விஹா! என்ன பைலட்டுக்கு பதிலா நீ பிளைட் கிளப்புற பிளானா?” என கேட்டு புன்னகைத்தான். அவள் அவனது தோளில் இதழ் பதித்து,

இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் 

என்னை இறுக்கும் சில  நினைவுகளிலிருந்து 

விடுதலை வேண்டி மண்டியிடும் என் மனது.

விலங்கறுத்து விலக்குவாயோ?

விரல் பிடித்து உன் மார்போடு இறுக்குவாயோ?

உன் பொறுப்பு !

குறுகுறுப்பு மீட்டும் உன் தீண்டலிலாவது,

மோட்ஷமடையட்டும்  மிச்சமிருக்கும் உணர்வுகள்!

அச்சமற்ற அணைப்பில் துச்சமாகுறது

என் துயரங்கள்.

வரங்கள் நீ வாரி வழங்க முனைய, 

சிணுங்கல்கள் என்னிடம் சிதற, 

சிறப்புரை வழங்குகிறது 

நம்மை இணைத்த சில்லிடும் காற்று!

என அவள் காதினுள் முணுமுணுக்கவும், அக்ஷ்ரன் நெகிழ்ந்து, அவளை தன் மார்புக்கூட்டுக்குள் பதுக்கிக்கொண்டான்.

விமானம் நகர அதன் ஜன்னலோரம் முத்தமிட்டு சொன்னது காற்று வாழட்டும் காதல் என.

***சுபம்***

(101-125)

Comments are closed.

Balladidf |
Laloufamily |
Shiraa14 |
Unblog.fr | Annuaire | Signaler un abus | Mapetitecouturefacile
| Arati Yoga
| Toutpourvotrechien